டெல்லி கொலை வழக்கு நாட்டையே உலுக்கி வருகிறது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். இச்சம்பவம் தொடர்பாக, பல்வேறு விதமான பகீர் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 


அதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஷ்ரத்தா மும்பையில் உள்ள மருத்துவமனையில் உள்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கால் சென்டர் பணியாளரான ஷ்ரத்தா வால்கர், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை மும்பைக்கு அருகிலுள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷர்த்தா, அப்தாப் ஆகியோருக்கு இடையேயான மோசமான உறவின் வெளிப்பாடாக இதை நாம் பார்க்க வேண்டும்.


ஷ்ரத்தாவின் நண்பர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், அவரது மூக்கு, கன்னம் மற்றும் கழுத்தில் காயங்களுடன் இருப்பதைக் காணலாம். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


ஷ்ரத்தாவின் நண்பர் ராகுல் ராய், இதுகுறித்து விரிவாக விவரிக்கையில், "2020 ஆம் ஆண்டு, அப்தாப் தாக்கப்பட்டதாக ஷ்ரத்தா போலீசில் புகார் செய்ய சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நான் அவரை காவல்துறைக்கு அழைத்துச் சென்றேன். இரண்டு மூன்று முறை அப்தாப் ஷர்த்தாவை தாக்கி உள்ளார். 


கழுத்தை நெரிக்க முயன்றது போல் ஆழமான தடம் புகைப்படத்தில் உள்ளது. ஷ்ரத்தா பயந்து போனாலும், வீட்டுக்குச் செல்லும்படி போலீசார் அவரை வற்புறுத்தினார். அந்த ஆண்டு டிசம்பரில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​கண்ணுக்குத் தெரியும் காயங்கள் எதுவும் தென்படவில்லை. 


ஆனால், அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டதாகவும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் ஒரு மருத்துவர் கூறினார். உள் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். ஒன்று, அவர் வீட்டில் விழுந்திருக்கலாம் அல்லது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம்" என்றார்.


 






இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை டெல்லி காவல்துறை வட்டாரம் நேற்று பகிர்ந்தது. அதாவது, கொலை செய்த பிறகு ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை அப்தாப் எரித்திருப்பது தெரிய வந்தது. 


முதலில் ஷர்த்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, பின்னர் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை எரித்திருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


"எப்படி கொலை செய்ய வேண்டும், அதை எப்படி மறைக்க வேண்டும் என்பதை அப்தாப் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார். விசாரணையின்போது, இதை அப்தாபே தெரிவித்துள்ளார்" என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.