பயங்கரவாதத்தை குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புபடுத்தி பேசும் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.


இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறுபான்மையினர்கள் மத்தியில் அச்ச உணர்வு நிலவி வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட மத பிரிவினர் மட்டுமே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது போன்ற கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. அதை எந்த மதத்துடனும் அல்லது குழுவுடனும் தொடர்புபடுத்த கூடாது என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.






பயங்கரவாத செயல்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை தடுக்கும் வகையில் நடப்பட்ட மூன்றாவது மாநாட்டில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.


டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், "பயங்கரவாதிகள் தொடர்ந்து வன்முறையை நடத்துவதற்கும், இளைஞர்களை தீவிரமயமாக்குவதற்கும், நிதி ஆதாரங்களை உயர்த்துவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.


தீவிரவாதிகள் தீவிரமான உள்ளடக்கத்தைப் பரப்பவும், தங்கள் அடையாளங்களை மறைக்கவும் Darknet மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதம் சந்தேகத்திற்கு இடமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தலாகும். ஆனால், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என்று நான் நம்புகிறேன்.


ஏனெனில், பயங்கரவாதத்தின் 'வழிகள் மற்றும் முறைகள்' அத்தகைய நிதியிலிருந்து வளர்க்கப்படுகின்றன. மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது உலக நாடுகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது. எந்த மதத்துடனும் தேசியத்துடனும் அல்லது குழுவுடனும் பயங்கரவாதத்தை தொடர்புபடுத்த முடியாது. இணைக்கவும் கூடாது என்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம்.


பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் சட்ட மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்" என்றார்.


பாகிஸ்தானை சாடி பேசிய அவர், "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைத்து மதிப்பிடவும் அதை தடுக்கவும் சில நாடுகள் முற்படுகின்றன. சில நாடுகள் பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதையும் அவர்களுக்கு அடைக்கலம் தருவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.


ஒரு பயங்கரவாதியைப் பாதுகாப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குச் சமம். அத்தகைய கூறுகள் அவர்களின் நோக்கங்களில் ஒருபோதும் வெற்றிபெற வைக்க கூடாது என்பது நமது கூட்டுப் பொறுப்பாகும்" என்றார்.