டெல்லியில் மதுபான விற்பனை ஊழல் வழக்கு தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சிபிஐ சோதனை நடத்திய நிலையில் மதுபானம் விற்க ஒப்பந்தம் பெற்ற வணிகர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர். 


டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) இன்று அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி, டெல்லி, லக்னோ, குருகிராம், சண்டிகர், மும்பை, ஹைதராபாத் மற்றும் வேறு சில இடங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 


ஐபிசியின் 120-பி (குற்றச் சதி) மற்றும் 477-ஏ (கணக்குகளை பொய்யாக்குதல்) ஆகியவற்றின் கீழ் சிபிஐயின் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான வியாபாரிகளுக்கு ரூ.30 கோடி விலக்கு அளிக்கப்பட்டதாகவும், உரிமம் வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த விருப்பப்படி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. 


மேலும், சிசோடியா மற்றும் ஒரு சில மதுபான வியாபாரிகள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மதுபான உரிமம் பெற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை கொடுத்து வழக்கை திசை திருப்ப முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 


டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அப்போதைய ஆணையர் (கலால்) அர்வா கோபி கிருஷ்ணா, அப்போதைய துணை ஆணையர் (கலால்), மற்றும் உதவி ஆணையர் (கலால்) பங்கஜ் பட்நாகர் ஆகியோர் 2021-22 ஆம் ஆண்டிற்கான மதுபான விற்பனையில் முடிவெடுத்தனர். ஆனால், தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், உரிமம் பெற்று டெண்டருக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்து எப்ஐஆர் பதியப்பட்டது. 


இதற்கிடையில், ED பணமோசடி தடுப்பு (பிஎம்எல்ஏ) வழக்கை பதிவு செய்துள்ளது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இன்று விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. கடந்த திங்கட்கிழமை, டெல்லி காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை அழைத்து, மதுபான விற்பனை மீதான விசாரணையை முடிக்க வேண்டாம் என்றும், தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 


அரவிந்த் கெஜ்ரிவால் அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை முடித்து வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 


இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கையில் ”லைசென்ஸ் மற்றும் புதிய மதுபான விற்பனை நிலையங்கள் ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய டெல்லி காங்கிரஸ், ஜூன் 3ஆம் தேதி அப்போதைய காவல்துறைத் தலைவரிடம் (ராகேஷ் அஸ்தானா) புகார் அளித்துள்ளதாக நாங்கள் ஆணையரிடம் தெரிவித்தோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவும் மதுபான ஊழலில் இருந்து வசூலான பணத்தை தங்கள் சொந்த லாபங்களுக்காக பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதலீடு செய்தனர்” என்று தெரிவித்தனர்.