பாஜக அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.


ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?


சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதி, ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் மற்றும் அக்கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே  பனிப்போர் நிலவி வந்த நிலையில், கட்சியின் மேலிடம் எடுத்த முயற்சியால் அது தற்போது  ஓய்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி, அசோக் கெலாட் அறிவித்த பல சமூக நல திட்டங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சித்து வருகிறது. அதேபோல, பிரதமர் மோடியின் செல்வாக்கை பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது.


காங்கிரஸ், பாஜகவை தவிர்த்து சிறிய சிறிய கட்சிகளும் ராஜஸ்தானில் யார் ஆட்சி அமைக்கப்போவது என்பதை தீர்மானக்கும் இடத்தில் உள்ளன. குறிப்பாக, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தானின் பல தொகுதிகளில் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.


கிங் மேக்கராக மாறுவாரா மாயாவதி?


கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தது. பாஜக, 73 தொகுதிகளில் வென்றது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 32 தொகுதிகளில், வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இரண்டாவதாக வந்த வேட்பாளருக்கும் இடையே இருக்கும் வாக்கு வித்தியாசத்தை விட மாயாவதியின் கட்சி, அதிக வாக்குகளை பெற்றது.


இந்த 32 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இப்படிப்பட்ட சூழலில், வரும் 25ஆம் தேதி ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ளது. வரவிருக்கும் தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று மாயாவதி கிங் மேக்கராக மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.