கடந்த 2019ஆம் ஆண்டு, பெண்களுக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடங்கி வைத்தது. பெண்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதில் இருந்து, இந்த திட்டத்தின் வழியாக எத்தனை பெண்கள் பயன் பெறுகின்றனர் என்பது குறித்து டெல்லி அரசு ஆண்டறிக்கை தாக்கல் செய்து வருகிறது.


பெண்களுக்கான இலவச பேருந்து பயண  திட்டம்:


இச்சூழலில், பெண்களுக்கான இலவச பேருந்துகள் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
பேருந்து நிலையங்களில் பெண்கள் மட்டும் நிற்கும்போது, இலவச பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்துவதில்லை என தொடர் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இந்த விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். பெண்களுக்காக டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தப்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


ஓட்டுநர்கள் மீது தொடரும் புகார்கள்:


சமீபத்தில், தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் பெண்கள் நின்று கொண்டிருந்தபோதும், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் ஓட்டி சென்றார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், குறிப்பிட்ட அந்த ஓட்டுநருக்கு தண்டனை வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


"பெண்களுக்கு பயணம் இலவசம் என்பதால் சில டிரைவர்கள் பெண்களை பார்த்து பஸ்சை நிறுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வகுப்பினரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் பிரீமியம் பேருந்துகளை இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என கெஜ்ரிவால் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார். ஆனால், பிரீமியம் பேருந்துகளில் பெண்களுக்கான விலையில்லா பயண திட்டம் அமல்படுத்தப்படாது என விளக்கம் அளித்தார்.


"இந்த பிரீமியம் பேருந்துகள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும். Wi-Fi, GPS, CCTV மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில் 'Panic Button' வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கட்டணத்தை தனியார் நிறுவனங்களே முடிவு செய்யும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே இருக்கும். அரசு பேருந்து கட்டணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்" என கெஜ்ரிவால் தெரிவித்தார்.


தேசிய தலைநகர் பகுதியில் இயக்கப்படும் மிக பெரிய போக்குவரத்து கழகம் டெல்லி போக்குவரத்து கழகமாகும். டெல்லி போக்குவரத்து கழகம், மொத்தம் 3,920 பேருந்துகளை இயக்குகிறது. இதில், 3,620 தாழ்தள சிஎன்ஜி பேருந்துகளாகும். மீதமுள்ள 300 மின்சார பேருந்துகளாகும். தமிழ்நாட்டிலும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.