Kejriwal Arrest: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தொடரும் ED நடவடிக்கை:
சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய பாஜக அரசு மிரட்டி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் விதமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நீண்ட காலமாக தகவல் வெளியாகி வருகிறது.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது:
இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறை அதிதாரிகள் கைது செய்தனர்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை ஒருமுறைக் கூட, அமலாக்கத்துறை முன்பு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியது. தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரியும் அவர் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் நான்கு மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் கைது முக்கியத்துவம் பெறுகிறது.