மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.


அதிரடியில் இறங்கிய அமலாக்கத்துறை:


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.


மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. மார்ச் 4ஆம் தேதி, விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?


கடந்தாண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல்முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்குவதால் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிவாய்ப்பை பறிக்கும் நோக்கில் தன்னை கைது செய்ய மத்திய பாஜக அரசு சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார். மேலும், தனக்கு சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்படுவதாக கூறி வருகிறார். 


டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் விசாரணையில், 7 முறை சம்மன் அனுப்பியும் அதற்கு ஆஜராகாதது ஏன் என நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்க உள்ளார்.


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப டெல்லி சிறப்பு நீதிமன்றம் எந்த வித தடையும் விதிக்கவில்லை. எனவே, தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. எவ்வளவு அதிக முறை அவர் சம்மன்களை நிராகரிக்கிறாரா, அதே அளவு அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அமலாக்கத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இதே வழக்கில் அவரை சிபிஐ விசாரணை செய்தது.


இதையும் படிக்க: களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?