டெல்லியில் 12 பேர் உயிரிழக்க காரணமான கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெண் டாக்டர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வைத்து பெண் டாக்டர் ஷாகீனை அண்மையில் போலீசார் கைது செய்திருந்தனர். டெல்லி கார் வெடிப்பில் ஈடுபட்ட காஷ்மீர் டாக்டர் உமருக்கு பெண் டாக்டர் உதவி செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை சேர்ந்த சுமார் 7 முதல் 8 டாக்டர்கள் இணைந்து ஹரியானாவின் பரிதாபாத்தில் முகாமிட்டு சதித்திட்டம் தீட்டி வந்தனர். சதித்திட்டம் குறித்து அறிந்த காஷ்மீர் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் டாக்டர் உமர் தலைமறைவானார். அவர் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளும் முன்பு அவசர அவசரமாக டெல்லியில் கார் வெடிப்பு தாக்குதல் நடத்தினார்.
கைது செய்யப்பட்ட பெண் டாக்டர் ஷாகீன் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்திய தலைவராக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் இவரின் காரில் இருந்து நேற்று வெடி பொருட்களும், துப்பாகியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
மேலும், டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நடந்த கார் வெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது. கார் வெடிப்பை தொடர்ந்து எழுந்த தீப்பிளம்பு சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளது.
கார் வெடிப்பு - நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர் சிகிச்சைப் பலனின்றி பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. காயமடைந்த 20 பேர் டெல்லி, எல்ஜேஎன்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே, திங்கட்கிழமை மாலை 6.52 மணி அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.