டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர் சிகிச்சைப் பலனின்றி பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
காயமடைந்த 20 பேர் டெல்லி, எல்ஜேஎன்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே, திங்கட்கிழமை மாலை 6.52 மணி அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் டெல்லி காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
அமித் ஷா தலைமையில் அவசரக் கூட்டம்
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அவசர உயர்மட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் தபன் தேகா, டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா மற்றும் என்ஐஏ தலைமை இயக்குநர் சதானந்த் வசந்த் டேட் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல ஜம்மு காஷ்மீர் காவல் துணைத் தலைவர் நளின் பிரபாத்தும் இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.
ஒருவர்கூட தப்ப முடியாது
இதற்கிடையே ’’டெல்லி கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள். இதற்குக் காரணமான ஒருவர்கூட தப்ப முடியாது’’ என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
செங்கோட்டை பயங்கரவாத தாக்குதலில் அதிக அளவு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் நம்புகின்றன. சோதனைகளில் மீட்கப்பட்ட பொருள் அம்மோனியம் நைட்ரேட்டாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது . இது உரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படலாம். சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.