டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்


டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்ததில் சிக்கி 8 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து என்ஐஏ மற்றும் தீவரவாத தடுப்பு பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டுளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் கார் வெடி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement


முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி


முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிர்கள் பல பலியாகியுள்ளது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழக அரசுக்கு அலர்ட் விடுத்த இபிஎஸ்


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில், ஃபரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஏறக்குறைய 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறியுள்ளார். 


நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், காவல்துறையும் மிகுந்த விழிப்புடன் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவரமாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிக முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


குற்றவாளிகள் விரைவில் கைது


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், புது தில்லியில் செங்கோட்டை அருகே உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட வெடிவிபத்தால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற வரலாற்று நினைவுச்சின்னம் அருகே அப்பாவி பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அர்த்தமற்ற வன்முறைச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். 


மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் காயமடைந்த அனைவருக்கும் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கொடூரமான பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நான் நம்புவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 


விஜய் இரங்கல்


தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே கார் வெடித்து விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிகொண்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.