தமிழ் இலக்கிய எழுத்தாளர் பெருமாள் முருகனை ‘குடிசைவாசி’ எனச் சித்தரித்து டெல்லி பாரதிய ஜனதா விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


குடிசைப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக டெல்லி பாரதிய ஜனதா தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது.அண்மையில் அதுகுறித்த போஸ்டர் விளம்பரம் ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகனை குடிசைப்பகுதியில் வசிப்பவராக சித்தரித்திருந்தது. 






பிரதமர் மோடி படத்துடன் கீழே குடிசைவாழ் மக்கள் புகைப்படங்களைக் கொண்ட விளம்பரம் டெல்லி சாலைகளில் கொடிக்கம்பங்களில் மாட்டப்பட்டிருந்தது. அந்த விளம்பரப் படத்தில் மாதொருபாகன்,பூனாச்சி, அர்த்தநாரி, கூளமாதாரி உள்ளிட்ட நாவல்களை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன் படமும் இடம்பெற்றிருந்தது. இது ட்விட்டரில் சர்ச்சைக்குள்ளானது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் விளக்கம்!
டெல்லி பாரதிய ஜனதா இதுவரை அதுபற்றி எதுவும் கருத்து கூறாத நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன், ‘நானும் குடிசையைச் சேர்ந்தவன் தான் அதனால் இந்த விளம்பரத்தால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


முருகன் தனது சர்ச்சைக்குரிய நாவலான மாதொருபாகனால் தமிழ் இந்துத்துவ அமைப்புகளிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தவர். அந்த நாவலின் சில பகுதிகள் திருச்செங்கோடு மக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் அவரது புத்தகங்களைச் சாலையில் எரித்தனர்.அதன்பிறகு தொடர்ச்சியாக எழுந்த அழுத்தத்தை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்தார்.மேலும் விற்காமல் இருக்கும் மாதொருபாகன் நாவலைத் தன்னிடம் பதிப்பகத்தார் திரும்பக் கொடுத்தால் அதற்கான பணத்தையும் திருப்பி அளித்துவிடுவதாக வாக்குறுதி அளித்தார். இனி தான் எதுவுமே எழுதப்போவதில்லை என்றும் 2015ல் சபதம் எடுத்தார். மேலும் புத்தகத்தின் எதிர்காலப்பதிப்பில் திருச்செங்கோடு குறித்த எந்த மேற்கொளும் இருக்கக்க்கூடாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இது அரசியல் சாசன உரிமைக்கு எதிரானது என்கிற அடிப்படையில் இதன் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு புத்தகத்தை தடை செய்வது கருத்துரிமைக்கு எதிரானது எனத் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் மீண்டும் எழுதத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.