களமிறங்கிய சிப்பிப்பாறை நாய்.. நீலகிரியில் வனத்துறைக்கு போக்குக் காட்டும் டி23 புலி.!

புலியின் நடமாட்டத்தை கண்டறிய அதவை என்ற சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் புலியின் இருப்பிடத்தை அறிய வனத்துறையினர் முயற்சி செய்தனர்.

Continues below advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டிய‌ பகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள்‌ அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை புலி தாக்கியது. இதில் கடுமையான‌ காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Continues below advertisement


தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கி கொல்லும் அபாயம் இருப்பதால் உள்ளூர் மக்கள் புலியை பிடிக்கக் கோரி, தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், அந்தப் புலி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சித்து வந்தனர். புலியை பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர். 

ஒரு வார காலமாக தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த டி 23 புலி, சிங்காரா பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத் துறையிடம் இருந்து தப்பியது. இதையடுத்து மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக, கேரள , கர்நாடக, இணைக்கும் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார்.


இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 8 நாட்களாக வனத்துறையினர் போராடியும், புலி பிடிபடாமல் சுற்றி வருகிறது. புலியின் நடமாட்டத்தை கண்டறிய அதவை என்ற சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் புலியின் இருப்பிடத்தை அறிய வனத்துறையினர் முயற்சி செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பிடியில் அகப்படமால் புலி சுற்றி வருகிறது.


இந்நிலையில் நேற்று புலி தாக்கி உயிரிழந்த மங்கள பசவன் உடலை வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புலியை சுட்டுக் கொல்லக் கோரி போராட்டம் நடத்தினர். மேலும் புலியை சுட்டுக் கொல்லும் வரை நிவாரணத் தொகை பெற மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola