இந்தியாவின் முக்கிய நகரங்கள், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. 


சுவாசிக்க முடியாமல் தவித்த பொதுமக்கள்:


முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் IQAir தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டனர்.


இதன் காரணமாக, காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் செயற்கை மழை பெய்ய வைக்க டெல்லி அரசு, இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து திட்டமிட்டு வந்தது.


மாசுவில் இருந்து டெல்லிவாசிகளை காப்பாற்ற வந்த மழை:


இந்த நிலையில், டெல்லி, நொய்டா, குருகிராம் உள்பட தேசிய தலைநகர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை பெய்துள்ளது. மோசமான காற்று மாசுபாட்டால் சிக்கி தவித்த மக்களுக்கு இது நிம்மதி பெருமூச்சுயை தந்துள்ளது. கர்தவ்ய பாதை, ஐடிஓ மற்றும் டெல்லி-நொய்டா எல்லை பகுதிகளில் மழை பெய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


டெல்லி மற்றும் என்சிஆர், சோஹானா, ரேவாரி, அவுரங்காபாத், ஹோடல் (ஹரியானா) பிஜ்னௌர், சகோட்டி தாண்டா, ஹஸ்தினாபூர், சந்த்பூர், தௌராலா, மீரட், மோடிநகர், கித்தோர், அம்ரோஹா ஆகிய பகுதிகளில் லேசான இடைவிடாத மழை பெய்யும் என்று 
பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RWFC) கணித்துள்ளது.


உத்தரபிரதேசத்தில் கர்முக்தேஷ்வர், பிலாகுவா, ஹபூர், குலாதி, சியானா, புலந்த்ஷாஹர், ஜஹாங்கிராபாத், அனுப்ஷாஹர், ஷிகர்பூர், குர்ஜா, பஹாசு, டெபாய், நரோரா, கபானா, ஜட்டாரி, கைர், நந்த்கான் மற்றும் பர்சானா, பிவாரி, கைர்தல், நகர், ஆல்வார், ஆல்வார், ராஜஸ்தானில் உள்ள டீக், லக்ஷ்மங்கர், ராஜ்கர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


காற்றில் குறிப்பிட்ட அளவுக்குதான் தீங்கு விளைவிக்கும் துகள்கள் இருக்க வேண்டும். ஆனால், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 100 மடங்கு அதிகமான தீங்கு விளைவிக்கும் துகள்கள் டெல்லி காற்றில் இருந்தன. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்ட தகவலின்படி, டெல்லியின் ஆனந்த் விஹாரில் சராசரி காற்றின் தரம் 462 (கடுமையானது) ஆகப் பதிவாகியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அது மிதமான அளவுக்கு மேம்பட்டது.


இதேபோல், ஆர்.கே.புரத்தில் சராசரி காற்றின் தரம் 446ஆக (கடுமையானது) பதிவாகியுள்ளது.  மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவின்படி,  காலையில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் (திருப்திகரமான) ஏற்பட்டுள்ளது.