டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர். படேல் சோக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினரை காவல் துறையினரை கைது செய்தனர். 






டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை அமைப்பு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவருக்கு ஒன்பது சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.


கைதானாலும் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்றும், தொடர்ந்து முதலமைச்சராக செயல்படுவார் என்றும், சிறையில் இருந்தே ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 6 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.






இது ஒரு பக்கம் இருக்க அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சி தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகம் மற்றும் வீடு சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். ஆனால் அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி காவல் துறையினர் தடுத்தனர். தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்திஒல் ஈடுபட்டதால் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.