மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் சொன்ன நபர், வேகத்தைடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியபோது உயிர் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேகத்தடைகள் பெரும்பாலும் பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் அதே வேளையில், மருத்துவர்களால் இறந்துவிட்டதாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இது ஒரு அதிசயமாக மாறியுள்ளது.
கோலாப்பூரில் 65 வயதான அந்த நபர், தனது 'உயிரற்ற உடலை' ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேகத் தடையில் ஏறி இறங்கிய பிறகு மீண்டும் உயிர் பெற்றார். டிசம்பர் 16ஆம் தேதி மகாராஷ்டிரா நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கசாபா-பவாடாவில் வசிக்கும் பாண்டுரங் உல்பே என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை எடுத்துக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கியது. அங்கு அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கூடி, அவரது இறுதிச் சடங்குகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
இதனிடையே ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கும்போது ஒரு ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் விரல் அசைவதை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக உல்பேவை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உயிர் இருப்பதை அறிந்து ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வேகத்தடையைக் கடந்து சென்ற பதினைந்து நாட்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை உல்பே இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், “நாங்கள் அவரது உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரும்போது, ஆம்புலன்ஸ் ஒரு வேகத் தடையைக் கடந்து சென்றது. அவரது விரல்களில் ஏதோ அசைவு இருப்பதை நாங்கள் கவனித்தோம்.” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பாண்டுரங் உல்பே கூறுகையில், “நான் நடந்து வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டு அமர்ந்திருந்தேன். எனக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நான் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது, யார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது உட்பட எனக்கு நினைவில் இல்லை" எனத் தெரிவித்தார்.
உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவமனை, இந்த சம்பவம் குறித்து இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.