டிசம்பர் மாதம் ஆண்டின் இறுதி மாதம் தான். ஆனால் இந்த மாதத்தின் முக்கியமான நாட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு
December 4, இந்திய கடற்படை தினம்
1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அப்போது, டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்க் கப்பல்களை தாக்கி அழித்தனர். இந்த போரில் இந்தியா வெற்றி பெற கடற்படையினரின் அதிரடி தாக்குதல் முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
December 5 - சர்வதேச தன்னார்வாளர் தினம்
ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 5ஆம் தேதி சர்வதேச தன்னார்வலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தன்னார்வலர்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
December 5 - சர்வதேச மண் தினம்
இந்த நாள் உலகம் முழுவதும் உல்ல மக்கள் மத்தியில் மண் வளம் பாதுகாக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நடத்தப்படுகிறது.
December 6 - அம்பேத்கர் நினைவு நாள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான அம்பேத்கரின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் மஹாபரிநிர்வான் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பண்முகத்தன்மை கொண்ட அம்பேத்கர் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது.
December 7 - கொடி நாள்
ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி கொடிநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாமான்ய மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு ராணுவ நிதியில் சேர்க்கப்படுகிறது. போரில் உயிரிழந்தோரை நினைவுகூர்கின்றனர்.
December 7 – சர்வதேச உள்நாட்டு விமான போக்குவரத்து நாள்
ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சிவில் போக்குவரத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.
December 9 - ஊழல் எதிர்ப்பு நாள்
கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஐ.நா. சபையில் ஊழல் தடுப்பு உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி, ‘சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஊழலைக் கையாள்வதில் மாநிலங்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள், தனியார் துறை, கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முன்னிலைப்படுத்துவதே சர்வதேச ஊழல் எதிர்ப்பு நோக்கமாக கருதப்படுகிறது.
December 10 - மனித உரிமைகள் தினம்
ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.
December 11- சர்வதேச மலைகள் தினம்
சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச மலைகள் தினம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை சர்வதேச மலைகள் நாளாக அறிவித்தது.
December 11- யுனிசெப் தினம்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
December 14- சர்வதேச எரிசக்தி தினம்
சர்வதேச எரிசக்தி தினம் 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. எரிசக்தியை சேமிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
December 16- Vijay Diwas
1971ல் பாகிஸ்தானுடனான போரை வெற்றி கண்ட நாள் விஜய் திவஸ் அல்லது வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவத்தின் தீரமிகு வரலாற்று பெருமிதத்தை சொல்கிற நாள்தான் டிசம்பர் 16 விஜய் திவஸ்
December 18- சிறுபான்மையினர் உரிமைகள் தினம்
இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாஸனத்தை பிரகடனம் செய்தது. அதன் அடிப்படையிலேயே டிசம்பர் 18ஆம் தேதியன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
December 22- தேசிய கணித தினம்
இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.
December 23- விவசாயிகள் தினம்
விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை இந்தியில் `கிசான் திவாஸ்' என்று அழைக்கிறார்கள். விவசாயிகளின் தேசிய பங்களிப்பைச் சொல்லும் வகையில் விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் இந்நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
December 24- தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்
இந்தியாவில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.