பழங்குடியினர்களுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துகு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.


எதிர்க்கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேவகவுடா, பரூக் அப்துல்லா, தேஜஸ்வி, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில், கொரோனா பாதித்து உடல்நிலை மோசமான நிலையிலும் ஸ்டேன் சுவாமி விடுவிக்கப்படவில்லை என்றும், அவர் மீது பொய் வழக்குகள் போடக் காரணமானவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எல்கர் பரிஷத் விவகாரத்தில் பொய் வழக்கு புனையப்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பீமா கோரேகான் வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும், அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக பீமா கோரேகான் வழக்கில் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்துள்ளார்.  சிறையில் இருந்த அவருக்கு உரிய மருத்துவ  வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில்  ஸ்டேன் சுவாமி மரணமடைந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து பரபரப்புரையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






ஸ்டேன் சுவாமி மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த  துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது’ எனப்பதிவிட்டுள்ளார்.