மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி, அதன் முதன்மையான செய்தி சேனலான டி.டியின் (தூர்தர்ஷன்) புதிய லோகோவை வெளியிட்டது. இந்த புதிய லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காவிமயமாக்கல் என குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.


ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, இது வெறும் மாற்றத்தை மட்டுமே குறிக்கிறது என தூர்தர்ஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தேர்தல் வருவதற்கு முன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த என்ன காரணம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.






 டிடி நியூஸ் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், புதிய லோகோவின் வீடியோவை வெளியிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்தது. அதில், "எங்கள் மதிப்பு அப்படியே இருக்கும்போது, ​​நாங்கள் இப்போது ஒரு புதிய அவதாரத்தில் பயணிக்க இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவிமயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.


இந்த விவகாரம் குறித்து பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோ இதே நிறத்திற்கு மாற்றி புதுப்பித்தோம். ஒரே குழுவில் இருந்து வரும் மற்றொரு சேனலுக்கும் இதே நிறம் தற்போது மாற்றி புதுப்பித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


இது ஒரு பக்கம் இருக்க, பல ஆண்டுகளாக, அந்த லோகோவில் ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன, ஆனால் அது பின் வரும் காலங்களில் நீக்கப்பட்டது. மார்ச் மாதம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின், தூர்தர்ஷன் தினமும் ராம் லல்லா சிலைக்கு செய்யப்படும் காலை பிரார்த்தனைகளை நேரடியாக ஒளிபரப்புவதாக அறிவித்தது. இது போன்ற சூழலில் தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பும் பொருளாக மாறியுள்ளது.