பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தன் சொந்த தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சமீபத்தில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மூத்த பத்திரிகையாளரான பர்கா தத் உடனான தன் உரையாடலின்போது தன் சொந்த தந்தையாலேயே தான் பாலியல் வன்முறையை சந்தித்தேன் எனும் அதிர்ச்சிகர தகவலை குஷ்பு பகிர்ந்திருந்தார்.


டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர்:


இந்த அதிர்ச்சியின் தாக்கமே குறையாத நிலையில், டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இதே போன்ற தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவர் என்னை அடிக்கடி அடிப்பார். அவர் வீட்டிற்கு வரும் போது எல்லாம் நான் பயந்து, படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்வேன். 


ஒவ்வொரு இரவும் பெண்களுக்கு அவர்களின் உரிமையைப் பெற எப்படி உதவ வேண்டும், குழந்தைகளைச் சுரண்டும் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையே யோசித்து கொண்டிருப்பேன். போனிடெயிலை பிடித்து சுவரில் எனது தலையை மோதுவார். எனக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வரும். 


அதை மறக்க ரொம்ப நாள் ஆச்சு:


ஒரு நபர் பல கொடுமைகளுக்கு ஆளாகும்போது தான் மற்றவர்களின் வலியைப் புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். அது முழு அமைப்பையும் அசைக்கக்கூடிய நெருப்பை எழுப்புகிறது. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தையுடன் வாழ்ந்தாள். இந்த சம்பவம் பல முறை நடந்தது.


மறக்காமல், மன்னிக்காமல், அதை என் பின்னால் வைத்துவிட்டு முன்னேறிச் செல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது. சிறுவயதில் என் தந்தையால் நான் சந்தித்த துன்புறுத்தல் கடினமான விஷயம். ஒரு குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளானால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும்" என்றார்.


அடுத்தடுத்து இரண்டு பிரபலங்கள், தங்களின் தந்தைகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானோம் என தெரிவித்திருப்பது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அனுபவங்களை பகிர்ந்து கொண்ட குஷ்பு: 


முன்னதாக, குஷ்பு அளித்த பேட்டியில், "என் அம்மா மிகவும் மோசமான திருமண வாழ்வை வாழ்ந்துள்ளார். என் தந்தை தனது மனைவியை அடிப்பது தனது உரிமை என்று நினைத்தவர். அவரது குழந்தைகளை அடித்து, அவரது ஒரே மகளான என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார். பாலியல் துன்புறுத்தல்களை நான் என் 8 வயதில் எதிர்கொள்ளத் தொடங்கினேன். 15 வயதில் தன் அவருக்கு எதிராக பேசும் தைரியம் எனக்கு வந்தது.


எதுவாக இருந்தாலும் கணவனைக் கடவுளுக்கு நிகராகக் கருதும் நிலையில் என் அம்மா இருந்தார். எனவே நான் இதைச் சொன்னால் என் அம்மா நம்பமாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் என் 15 வயதில் பொறுத்தது போதும் என்று உணர்ந்து அவரை எதிர்க்கத் தொடங்கினேன்.  எனக்கு 16 வயது கூட ஆகவில்லை. எங்களை என் தந்தை அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அடுத்தவேளை உணவுகூட கிடைக்காமல் தவித்தோம்” என கூறி இருந்தார்.