இந்தியாவின் மிகவும் பிரபலமான புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக். இவர் பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸில் தற்போது பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் போக்கு கடந்த சில தினங்களாக தீவிரமாக உள்ளது. இதையடுத்து, ராய்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக புகைப்பட பத்திரிகையாளராக டேனிஷ் சித்திக் கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கி செய்திகளை சேகரித்து வந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் அமைந்துள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ படைகளுக்கும், தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அங்கே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டேனிஷ் சித்திக் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 




ராய்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த சில தினங்களாக ஆப்கானில் தாலிபன்கள் முன்னேறிவருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கந்தகாரில் தலிபான் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதை அவர் மிகவும் நெருக்கமாக படம்பிடித்து இருந்தார்.






அவர் உயிரிழந்ததை இந்தியாவிற்கான ஆப்கான் தூதர் பரீத் மமூன்த்ஷே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கந்தகாரில் நேற்று இரவு நண்பர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார் என்ற சோகமான செய்தியை தெரிவிக்கிறேன். அவர் 2 வாரங்களுக்கு முன்பு காபூல் வந்தபோது அவரை சந்தித்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ராய்டர்ஸ் நிறுவனத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்புகூட ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்ட மீட்பு ஆபரேஷனுக்கு அவர்களுடன் சேர்ந்து சென்றார். அப்போது, அவருக்கு முன்னால் சென்ற ராணுவ வாகனத்தை தலிபான்கள் தாக்கியதில் டேனிஷ் சித்திக் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், ஆர்.பி.ஜி. ரக குண்டுகளால் நடத்தப்பட்ட அந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்தும், இதனால் அந்த நாட்டு மக்கள் தினம், தினம் எதிர்கொள்ளும் சிரமங்களையும் செய்திகளாக வெளியிட்டு இருந்தார்.




உலகப் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றவர் டேனிஷ் சித்திக். இந்தியாவில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் ருத்ரதாண்டவம் ஆடியபோது தினசரி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், அவர்களது உடல்களை கொத்து கொத்தாக சுடுகாடுகளில் எரியூட்டினர். இதனால், வட இந்தியாவில் பல இடங்களில் 24 மணி நேரமும் சுடுகாடு எரிந்துகொண்டே இருந்தது. அரசுத் தரப்பு அலட்சியங்களையும், ஆக்சிஜன் பற்றாக்குறை, அவலங்கள் என பல உண்மைகளை தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் டேனிஷ் சித்திக். உத்தர பிரதேசத்தின் கங்கை நதியில் அருகே சடலங்கள் கொத்துகொத்தாக எரிக்கப்படுவதை கழுகு பார்வையில் இருந்து இவர் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவின் மோசமான நிலையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டியது.


மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்தக் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.