கர்நாடகாவில் தலித் சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த சாதிய வன்முறை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கர்நாடகாவின் மாநிலம் கோலார் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்தது. கோலார் மாவட்டத்தில் மலூர் தாலுகாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. கோயிலில் உள்ள தெய்வத்தின் சிலையை சிறுவன் தொட்டதுதான் குற்றம். இதற்காக உல்லேர்ஹல்லி மலூர் தாலுக்கில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பூத்தம்மா என்ற கிராமத்து தேவதை கோயில் ஊர் நடுவே உள்ளது. கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அந்த சிறுவனின் குடும்பத்தை அழைத்து ஊர் பஞ்சாயத்தில் நிற்க வைத்தனர். உங்கள் மகன் சாமி சிலையை தொட்டதால் அவமரியாதையாகிவிட்டது. அதற்கு தண்டமாக ரூ.60 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்றனர். கோயிலில் தலித் மக்கள் நுழையக் கூடாது என்ற விதிமுறையை மீறி உங்கள் மகன் நுழைந்துள்ளார் என்றனர். கோயிலை சுத்தப்படுத்தவே ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்றால் என்ன?
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பிசிஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் பட்டியலின மக்களுககு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது. பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.
சாதிவெறியுடன் நடத்தப்படும் தாக்குதல்கள் பல, ஊடக வெளிச்சத்திற்கு வந்து, நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தாலும் பல்வேறு சமயங்களில், பல்வேறு இடங்களில் இந்தக் கொடுமைகள் வெளியில் தெரியாமலே அழிந்துபோகின்றன. வன்கொடுமையைத் தங்கள் வாழ்வியலாகவே ஏற்றுக்கொண்டு, அதிலிருக்கும் சரிவும் தவறும் குறித்து கவலையில்லாமல் இருக்கும் பல்வேறு மக்கள் இருக்கின்றனர். இதில், வன்கொடுமையை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் என இரு தரப்பினருமே அடக்கம்.