பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்ட ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு நேற்று(20.03.25) ஒப்புதல் அளித்துள்ளது.

Continues below advertisement

சக்திவாய்ந்ததாக மாறும் ராணுவ டாங்கிகள்

அதன்படி, இந்திய ராணுவத்தில் உள்ள டி-90 பீஷ்மா டாங்கிகளுக்கு, தற்போதுள்ள 1000 ஹெச்பி என்ஜினை மேம்படுத்தும் வகையில் 1,350 ஹெச்பி என்ஜின் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, சக்திக்கும் எடைக்கும் இடையிலான விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த டாங்கிகள் போர்க்களத்தில் தனது இயக்கத்தை, குறிப்பாக உயரமான பகுதிகளில் மேம்படுத்தும்.

நவீனமயமாகும் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை

இந்திய கடற்படையை பொறுத்தவரை, வருணாஸ்திர நீர்மூழ்கி எறி குண்டு (டார்பிடோ) கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருணாஸ்திர டார்பிடோ என்பது, ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலை தாக்குவதற்காக செலுத்தப்படும் எறி குண்டாகும். இதை, கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் உருவாக்கியுள்ளது. இந்த டார்பிடோவின் கூடுதல் அளவுகளை சேர்ப்பது, எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கடற்படையின் திறனை மேம்படுத்தும்.

Continues below advertisement

இதேபோல், இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில், வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமான அமைப்புகளை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆயுத அமைப்பின் போர் திறனையும் அதிவேகமாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தில், 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக கொண்டாடும் வகையில், மூலதனம் கையகப்படுத்தும் செயல்முறையின் பல்வேறு நிலைகளில் காலக்கெடுவை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுக்கு, அதாவது தளவாடங்களை தாமதமின்றி வேகமாக கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதே நாளில், ரூ.7,000 கோடி மதிப்பில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட தோண்டப்பட்ட பீரங்கி துப்பாக்கி அமைப்பை (Advanced Towed Artillery Gun System - ATAGS) கொள்முதல் செய்ய, பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.