வங்கக் கடலில் உருவான குலாப் புயலானது மேலும் தீவிரமடைந்து ஷாஹீன் என்ற புயலாக மீண்டும் 2, 3 நாட்களில் தாக்க வரலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியன்று, மத்திய கிழக்கு வங்கக் கடலில், ஒரு புயல் உருவாகி அது இந்தியாவை நோக்கி நகர்வதாகக் கூறியது வானிலை ஆய்வு மையம். அதற்கு குலாப் எனப் பெயர் சூட்டப்பட்டது. குலாப் என்றால் ரோஜாப்பூ என்று அர்த்தம். இந்தப் பெயரை பாகிஸ்தான் வழங்கியது.
இந்த குலாப் புயலானது, கடலோர இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டது. அதேபோல் ஆந்திராவின் வடபகுதி, தெற்கு ஒடிசா, விதர்பா, மகாராஷ்டிரா எனப் பல கடலோரப் பகுதிகளை குலாப் சீண்டிச் சென்றது. இந்நிலையில் அதே குலாப் புயல் 2, 3 நாட்களில் ஷாஹீனாக மீண்டு வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெயர்களின் பின்னணி:
வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன. ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை வழங்கும். அகரவரிசையில் இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுக் கொள்கின்றன.
அரபிக் கடல், வங்கக் கடல், வடக்கு இந்திய பெருங்கடல் ஆகியன ஆண்டுக்கு 5 புயல்களை சந்திக்கின்றன. புதிதாக தயாரிக்கப்பட்ட புயல்களின் பெயர் பட்டிலை வைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்படும் புயல்களுக்கு பெயர்களை வைத்து கொள்ளலாம்.
ஷாஹீன் பெயர் எங்கிருந்து வந்தது?
ஷாஹீன் என்ற பெயரை கத்தார் நாடு கொடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நாடுகளின் பட்டியலில் கத்தார் உள்ளது. ஷாஹீன் என்றால் கம்பீரமான கழுகு என்று பொருள். மத்திய தரைகடல் நாடுகளில் ஷாஹீன் என்ற வார்த்தையை பல்வேறு உவமைகளுக்கும் பயன்படுத்துவது உண்டு.
ஷாஹீனுக்கு அடுத்து ஏதேனும் புயல் உருவானால் அதற்கு ஜாவத் என்று பெயரிடப்படும். இன்னும் சில அடுத்தடுத்த புயல்களுக்கும் பெயர் உள்ளன. அசானி, சிட்ராங், மேடோஸ் போன்ற பெயர்கள் வழங்கப்படும்.
புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது. இவ்வாறாக பெயர் வைக்கும் போது தனிநபர் பெயர் நிச்சயமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. புயலுக்குப் பெயர் வைப்பதால் அதன் போக்கை அறிந்து கணித்து பொதுமக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த எளிதாக இருக்கிறது என்பதால் இவ்வாறாகப் பின்பற்றப்படுகிறது.