வங்கக் கடலில் உருவான ‘மோன்தா‘ புயல், நேற்று முன்தினத்திலிருந்து ஆந்திராவை நோக்கி பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது. மசூலிப்பட்டினம், காக்கிநாடா அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியபோது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியுள்ளது. அதோடு, விடிய விடிய மழை கொட்டித் தீர்த்துள்ளது.

Continues below advertisement

இரவில் கரையை கடக்கத் தொடங்கிய ‘மோன்தா‘ புயல்

‘மோன்தா‘ புயல் நேற்று இரவு மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில், மசூலிப்பட்டினம், காக்கிநாடா அருகே கரையை கடக்கத் தொடங்கியது. புயல் கரையை கடக்கத் தொடங்கியதில் இருந்து, கடலோர மாவட்டங்களில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியுள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கோதாவரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், கடலோரப் பகுதிகளில் தங்கியிருந்த சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று காலை வரை வாகனப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பாதுகாப்புப் பணியில் பேரிடர் மீட்புத் துறை - கண்காணித்த ஆந்திர முதல்வர்

‘மோன்தா‘ புயல் இரவில் கரையை கடந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், புயல் கரையை கடக்கும் பகுதியில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்து பணிகளை பார்வையிட்டு, துரிதப்படுத்தினார்.

கரையை கடந்த ‘மோன்தா‘ புயல்

நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே, கரையை கடந்தது ‘மோன்தா‘ புயல். அப்போது வீசிய சூறைக்காற்றில் கடலோரப் பகுதிகளில் இருந்த மின் கம்பங்கள் மற்றும் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதோடு, இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

இந்த புயலின் தாக்கத்தால், ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திராவில் 38 ஆயிம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 1.38 லட்சம் ஹேக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன.

ஒருவர் உயிரிழப்பு

‘மோன்தா‘ புயல் கரையை கடந்த நேரத்தில் பெய்த கனமழை காரணமாக, ஆந்திராவில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிசாவிலும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.