"ராமன் விளைவு" என்று அழைக்கப்படும் கண்டுபிடிப்பு ,விஞ்ஞான ஆராய்ச்சி துறைக்கு சிவி ராமன் வழங்கிய  மிகப்பெரிய பொக்கிஷங்களில் ஒன்றாகும்.


1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி  திருச்சியில் பிறந்தார் சி.வி ராமன்.  இவரது தந்தை ஒரு இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.  தந்தை விசாகப்பட்டினத்தில் பணியாற்றியதால் தானும் அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார் சி.வி.ராமன். பின்னர் தன்னுடைய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் தொடர்ந்த சிவி ராமன், முதுகலை பட்டப் படிப்பில் சாதனை மதிப்பெண்களை பெற்று  அசத்தியுள்ளார்.


1929 ஆம் ஆண்டு சிவி ராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டிய ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியதாக கூறப்படுகிறது. இயற்பியலிலும் அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்ட ராமன் தன்னுடைய 82 வது வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்து கொண்டே இருந்தார் என சொல்லப்படுகிறது.


இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் உலக அளவில் அறிவியல் ,இயற்பியல் மற்றும்  ஆராய்ச்சிகள் போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.  உலக அரங்கில் இந்தியாவின் பெயரை நிலை நிறுத்திய இயற்பியல் விஞ்ஞானியான சந்திர சேகர வெங்கட ராமனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.


ஒளியானது ஒரு பொருளை ஊடறுத்து செல்லும் பொழுது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த சிவி ராமன், அதற்கு ராமன் விளைவு என பெயர் சூட்டினார்.


இந்த கண்டு பிடிப்புக்காக 1930 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.  இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையயும் அடைந்தார் சர் சி .வி ராமன்


சி.வி.ராமன் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை பார்க்கலாம் :


1. 1929 இல் ராயல் சொசைட்டியின் தலைவர் எர்னஸ்ட் ரதர்ஃபோர்ட் தனது உரையில், ராமன் விளைவைக் குறிப்பிட்டு பாராட்டுகளை தெரிவித்த அதே வேளை, அவருக்கு  இளங்கலை விருது வழங்கி கௌரவித்தனர். மேலும், ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற பட்டமும் சர் சி.வி ராமனுக்கு வழங்கப்பட்டது.


2. இந்திய அறிவியல் கழகத்தின் (IIS) முதல் இந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார் சி.வி ராமன். 1933 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில்,  இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களே இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் ,சி.வி ராமன் இந்தியாவின் முதல் அறிவியல் கழக இயக்குனராக நியமிக்கப்பட்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகவே பார்க்கப்பட்டது. 


3. 1947 இல் சுதந்திர இந்தியாவின் முதல் பேராசிரியராகவும் சிவி ராமன் நியமிக்கப்பட்டார்.


 4. உலக அளவில் இயற்பியலுக்கு நோபல் பரிசை வென்ற சி.வி ராமன் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதையும் வென்றார். பின்னர் 1954 ம் ஆண்டு
அவருக்கு  பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


5. சி.வி, ராமன் தனது 16வது வயதில் சென்னை  பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதேபோல் சென்னைப் பல்கலைக்கழகத்தின்   தேர்வுகளில் முதலிடம் பெற்றார்.


6. இந்திய இயற்பியல் இதழின் நிறுவனரான சி.வி ராமன், 1926 இல் பத்திரிகையைத் தொடங்கினார்.


7 . உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான, ராமன் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார். 1917 இல் ராஜாபஜார் அறிவியல் கல்லூரியில் அசுதோஷ் முகர்ஜியால் இயற்பியல் துறையின் முதல்  பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.


8. 1933 இல் இந்திய அறிவியல் அகாடமியை நிறுவிய ராமன், அதே ஆண்டில், அவர் இந்திய அறிவியல் கழகத்தில் இயக்குநராக சேர்ந்தார். 1948 இல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிறுவினார்.


9. 1928 ஆம் ஆண்டு  ராமன் விளைவை சர் சி.வி ராமன் கண்டுபிடித்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.


இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரையும், சர்.சி.வி.ராமன் பெயரும் புகழும் ஓங்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. தற்போதைய காலகட்டத்தில் ஆராய்ச்சிகளில்  ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சர் சி.வி ராமனின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.