நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி சேர நடத்தப்படும் முதுகலை க்யூட் தேர்வு நாளை (செப்.1) தொடங்குகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் என்னென்ன? பார்க்கலாம்.
முன்னதாக, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் எனவும் ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இந்த சூழலில், 2022-23ஆம் கல்வி ஆண்டில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 19ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 18ஆம் தேதி வரை இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கணினி முறையில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான முதுகலை க்யூட் தேர்வு நாளை (செப்.1) தொடங்குகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கும் க்யூட் தேர்வு, செப்டம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு ஸ்லாட்டுகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மதியம் 5 மணி வரை தேர்வுகள் நடைபெறும். முதுகலை க்யூட் தேர்வை இந்த ஆண்டு 3.57 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
தேர்வர்கள் கவனத்துக்கு
* தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டியது அவசியம்.
* ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, அனைத்து பக்கங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
* வெளிப்படையான பாட்டிலில் தண்ணீர், மாஸ்க், சானிட்டைசர் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.
* பான் கார்டு, ஓட்டுநர் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை அடையாள ஆவணங்களாக எடுத்துச் செல்லலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம்.