கிரிப்டோ கரன்ஸிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். சர்வதேச நாடுகள் முழுவதும் கிரிப்டோ கரண்சியில் கவனம் செலுத்திவரும் காலம் இது. பிட்காயின், எதிரீயம், பினான்ஸ், ரிப்பள், ஷிபு ஆகிய பல்வேறு டிஜிட்டல் கரன்ஸிகள் இருக்கின்றன.


கடந்த 2008-ம் ஆண்டு அடையாளம் தெரியாத குழுக்களால் பிட்காயின் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தலையீடு ஏதும் இல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் பொருட்கள், சேவை பெறவும் பணப் பரிமாற்றத்துக்கும் பிட்காயின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் பிட்காயினில் முதலீடு செய்வது, பிட்காயினில் வர்த்தகம் செய்வது, பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.




இந்நிலையில், திடீரென மத்திய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு இந்தியாவில் தடை விதித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிப்டோ கரன்ஸிக்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம், ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. இது மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (Central Bank Digital Currency) என்று அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி என்பது நாம் பயன்படுத்தும் பணத்தின் மெய்நிகர் வடிவம். ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்படும் சட்டப்பூர்வமான பணமாகவும் இது கருதப்படும்.


இந்நிலையில், கிரிப்டோ கரன்ஸிகளை ஒழுங்குபடுத்த ஒழுங்குமுறை மசோதா ஒன்றை கொண்டுவரவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்த மசோதா குறித்து நிர்மலா சீதாராமன் இன்று விவரித்துள்ளார். ராஜ்யசபாவில் பேசிய நிர்மலா சீதாராமன், "கிரிப்டோ கரன்ஸி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த மசோதா மூலம் தனியார் கிரிப்டோ கரன்ஸிகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்ஸியை அனுமதிப்பதில் இருக்கும் அடிப்படை சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிரிப்டோ கரன்ஸிகள் தவறானவர்களின் கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதே எங்களின் அக்கறை. அது குறித்தே நாங்கள் ஆலோசித்தேன்" என்றார்.




கிரிப்டோ கரன்ஸி ஒழுங்குமுறை மசோதா கொண்டு வருவதோடு வருமான வரி சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து, க்ரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் லாபத்தையும் வருமான வரிக்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று ஒருபுறம் பேசப்பட்டாலும் க்ரிப்டோ கரன்ஸியை  அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை என்று அமைச்சர் கூறியதும் கவனிக்கத்தக்கது.


முந்தைய சட்ட மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த இருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.