உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி இணையதளங்களான பைனன்ஸ் (Binance), குகோயின் (Kucoin), ஓகேஎக்ஸ் (OKX) உள்ளிட்டவை இந்தியாவில் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து இதன் செயலிகள் நீக்கப்பட்ட நிலையில், அதன் இணையதளங்கள் நேற்று முடக்கப்பட்டன.


பணமோசடி சட்டங்களை மீறி செயல்பட்ட கிரிப்டோ இணையதளங்கள்:


பணமோசடி சட்டங்களை மீறி செயல்பட்டதாக கூறி, பைனன்ஸ், குகாயின், ஓகேஎக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 இணையதளங்களை தவிர, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global மற்றும் Bitfinex ஆகிய இணையதளங்களுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


விளக்கம் அளிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட இரண்டு வார கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இணையதளங்களை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் வரி சட்டங்களை மீறியதாகவும் பதிவு செய்யாமல் சட்ட விரோதமாக இயங்கியதாகவும் இணையதளங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இணையதளங்களை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது. ஆப்பிள் பிளே ஸ்டோரை தொடர்ந்து, ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்தும் இதன் செயலிகள் நீக்கப்படும் என கூறப்படுகிறது.


மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை:


அளிக்கப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறியுள்ளார் இந்திய கிரிப்டோ நிறுவனமான முட்ரெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எடுல் படேல். இதுகுறித்து அவர் விளக்குகையில், "தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விதியை பின்பற்றக்கூடிய தளங்களுக்கு தங்கள் நிதியை மாற்றுமாறு முதலீட்டாளர்களை அறிவுறுத்தினோம்.


தடையற்ற நிதி பரிமாற்றத்தை உறுதி செய்யும் வகையில் முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து உதவி அளித்து வருகிறோம். இந்திய முதலீட்டாளர்கள் எப்பொழுதும் தங்கள் சொத்துக்களை நிதி அமைச்சக விதிகளை பின்பற்றக்கூடிய நிறுவனங்களில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்" என்றார்.


விதிகளை மீறி வரி மோசடியில் ஈடுபடுவதாக கிரிப்டோ நிறுவனங்கள் மீது ஈஸியா ஆராய்ச்சி மையம் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், "இவை பதிவு செய்யப்படாத நிறுவனமாக இருப்பதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. உள்ளூர் பங்கு சந்தைகளுக்கு உதவிடும் வகையில் வெளிநாட்டு கிரிப்டோ இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


CoinDCX நிறுவனத்தின் இணை நிறுவனர் சுமித் குப்தா, இதுகுறித்து கூறுகையில், "வெளிநாட்டு பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம், இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்த்து, ஒரு சமநிலையை உருவாக்குகிறது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பது மட்டுமல்லாமல், உறுதியளிக்கும் இணக்கமான சூழலை நோக்கி நகர்வதை குறிக்கிறது" என்றார்.