பாகிஸ்தானுக்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை தொடங்குவது குறித்து பேசியதாக செய்திகள் வெளியாகின. அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்:


வரலாற்று ரீதியாகவும் சமகால அரசியல் சூழல் காரணமாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, இந்தியாவில் நடக்கும் அரசியல் நகர்வுகளை பாகிஸ்தான் உற்று கவனிக்கும்.


கடந்த 2008ஆம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் விரிசல் அடைந்தது. குறிப்பாக, இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வருகிறது.


கடைசியாக, கடந்த 2012ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மற்றபடி, ஐசிசி போட்டிகள் வழியாக மட்டுமே இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன. 


ஜெய்சங்கர் பேசியது என்ன?


இந்த சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்லாமாபாத் சென்றிருந்தார். அங்கு, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாருடான பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது குறித்து இரு நாட்டு தலைவர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின.


இந்த நிலையில், இந்திய அரசு, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "இந்த தகவல்களில் உண்மை இல்லை" என்றார்,


இதுகுறித்து விரிவாக விளக்கம் அளித்த அவர், "மங்கோலியாவைத் தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்ச மாநாட்டின் போது எந்த நாட்டுடனும் இருதரப்பு சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. இரவு உணவின் போது பொதுவாக மட்டுமே பேசினோம். வேறு எதுவும் நடக்கவில்லை.


தனது பயணத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை மட்டுமே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். ஆனால், பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. உச்சிமாநாட்டின்போது, இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறாது என்று ஜெய்சங்கர் ஏற்கனவே சொல்லிவிட்டார்.