பொதுவாக மாடு வைத்திருப்பவர்கள் அதற்கு கன்னுக்குட்டி பிறந்தால் அதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அத்துடன் பசு மாடு கன்றுக்குட்டி ஈன்ற பிறகு கிடைக்கும் சீம் பால் உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து தங்களுடைய பசுக்கன்று போட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வார்கள். அந்தவகையில் பசு மாடு ஒன்று போட்டுள்ள கன்றுக்குட்டி அவர்களை ஒரு தெய்வத்தின் அடையாளம் என்று வணங்க வைத்துள்ளது. அப்படி அவர்கள் வணங்கக் காரணம் என்ன?
ஒடிசா மாநிலத்தில் நப்ரங்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிஜிபாரா என்ற கிராமத்தில் உள்ள தனிராம் என்பவரின் பசு மாடு இன்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்னுக்குட்டிக்கு அதிசயமாக இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்கள் இருந்துள்ளது. இதைக் கண்டவுடன் அந்த உரிமையாளர் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளார். அத்துடன் நவராத்திரி பண்டிகை முன்பாக பிறந்துள்ளதால் இது தேவி துர்கையின் வடிவம் என்று அவர்கள் வணங்க தொடங்கியுள்ளனர். மேலும் இந்தச் செய்தியை அறிந்து அந்த கிராமபுறத்தில் உள்ள பிற மக்களும் நேரில் வந்து அந்தக் கன்றுக்குட்டியை வணங்க தொடங்கியுள்ளனர்.
இந்தக் கன்றுக்குட்டி தொடர்பான வீடியோ ஒன்றை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இதை நம்பவே முடியவில்லை மிகவும் அதிசயமாக உள்ளது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர் இந்தக் கன்றுக்குட்டியை வணங்குவதற்கு பதிலாக அதற்கு தேவையான மருத்துவ உதவியை அளிக்க வேண்டும். ஏனென்றால் இந்த கன்றுக்குட்டியால் சரியாக தாய் பாலை குடிக்க முடியாது என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் உடனடியாக விலங்குகள் நல மருத்துவரிடம் இந்தக் கன்றுக்குட்டியை காண்பித்து உரிய மருத்துவம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கண்ணான கண்ணே..! நடுவானில் அப்பா-மகள் அன்பின் நெகிழ்ச்சியான வைரல் வீடியோ !