மீண்டும் அலற வைக்கும் கொரோனா:


கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தியது.


இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. JN.1 புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் நேற்று புதன்கிழமை மட்டும் 351 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது. 


தயாராக இருக்கும் இந்தியா:


இந்நிலையில், ஜேஎன் 1 புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து  முன்னாள் WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "கடந்த ஒரு மாதமாக, கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஜேஎன் 1 கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை சாதாரண சளியாக எடுத்து கொள்ள முடியாது. இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநல பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு திடீரென உயர்வது முதல்முறை இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் பல முறை இப்படி அதிகரித்துள்ளது.


தற்போது  அதிகரித்துள்ள ஜேஎன் 1 கொரோனா என்பது ஒமைக்ரானில் இருந்து உருமாறியது. இது ஓமிக்ரானை போல லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.  ஒருவேளை கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக பரவினாலும், அதனை கையாள இந்தியா தயாராக உள்ளது.   சில நாட்களுக்கு பிறகு இந்தியாவுக்கு நாங்கள் வருகிறோம்.  


அனைத்து மாநிலங்களையும் உன்னிப்பாக கவனிப்போம்.  தற்போது, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். தடுப்பூசிகள் இன்னும் செயல்படுகின்றன என்று நான் நினைக்கிறேன்.  தடுப்பூசிகள் அதிக அளவிலான பாதுகாப்பு வழங்குகின்றன. குறிப்பாக, வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சத்தி குறைவாக உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது” என்றார்.


சாதாரண சளி இல்லை:


தொடர்ந்து பேசிய அவர், ”கொரோனா வைரஸை நாம் சாதாரண சளி அல்லது ஜலதோஷத்துடன் ஒப்பிட முடியாது. இது சாதாரண ஜலதோஷத்தில் இருந்து மிகவும் வித்தியசமானது. இந்த புதிய வகை கொரோனா தொற்று சளியை ஏற்படுத்தும். சளி தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.  இதற்கு கொரோனா தொற்றுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும், இதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதனால், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க முடியும்  


காய்ச்சல், இருமல், வாந்தி, சோர்வு, சாப்பிட இயலாமை, சுவாச பிரச்னை ஆகியவை புதிய வகை கொரோனா தொற்றின் அறிகுறிகளாகும். இந்த புதிய வகை தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, வயதானவர்கள், நோய்  எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவார்கள் கட்டயாம் முகக் கவசம் அணிய வேண்டும்.  எனவே, அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.