கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 


முன்னதாக, கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு விசாரனையின்போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 




இதற்கு,மத்திய அரசு சார்பில் நேற்று பதிலளிக்கப்பட்டது. அதில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் மூலம் கொரோனா இழப்பீடுத் தொகை வழங்கப்படும். மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. 




" மறு அறிவிப்புகள் வெளியாகும் வரை, கொரோனா பெருந்தோற்றால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படும்" என்று மத்திய அரசு தனது பதிழ்மனுவில் தெரிவித்தது.

 


வழிமுறைகள் என்ன? "இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாநில அரசாங்க அமைப்பால் வழங்கப்பட்ட படிவத்தை தொடர்புடைய உறவினர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  சிறந்த எளிமையான நடைமுறைகள் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. 


முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவிட்-19 தொடர்பான இறப்புகளுக்கு தேவையான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வழங்குதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. வழிகாட்டுதல்களின் படி, " கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தேதியில் இருந்து (அல்லது)  மருத்துவ ரீதியாக கொரோனா பாதிப்பு என மதிப்பிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட உயிரிழப்பு கொரோனா இறப்பாக கருதப்படும் எனத் தெரிவித்துள்ளது. 


இதைத் தவிர, "கொரோனா பெருந்தொற்றில் இருந்து குணமடையாத நோயாளிகள் வீடு அல்லது மருத்துவமனை அமைப்புகளில் உயிரிழந்து, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 பிரிவு 10-ன் கீழ், இறப்புக்கான காரணங்களுடன் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் கொரோனா இறப்பாகக் கருதப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா நோய்த்தொற்றுடன் தொடர்பு இருந்தாலும் தற்கொலை, கொலை, விபத்துகள் போன்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கொரோனா இறப்புகளாக கருதப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில பேரிடர் நிவாரண நிதி:  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280 கீழ் நிதி ஆணையங்களின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பங்காக ரூ. 8873.60 கோடி கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் விடுவிக்கப்பட்டது


குறிப்பிடப்பட்டுள்ள 12 பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.  எனினும் நாட்டில் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டும், அதனை பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதாலும், தனிமைப்படுத்தல், அதற்கான நடவடிக்கைகள், மாதிரி சேகரிப்பு, அத்தியாவசிய உபகரணங்களின் கொள்முதல் போன்ற பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து குறைந்த தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது 


இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அவர்களுக்கு நிவாரண முகாம், உணவு போன்றவற்றை அளிப்பதற்காகவும் இந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.