சீனாவில் கொரோனா பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாக தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்தியாவிற்கு ஆபத்தா..?


சீனாவில் பரவி வரும் கொரோனாவுக்கு BF.7 வகை கொரோனாவே காரணமாகும். சீனாவை போல இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், சீனாவில் நிலவும் தீவிரமான கொரோனா நிலை போல இந்தியாவில் ஏற்படாது என மூத்த விஞ்ஞானியும் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநருமான வினய் கே நந்திகூரி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் மக்கள் மத்தியில் ஹெர்ட் இம்யூனிட்டி தோன்றிவிட்டதால் சீனாவை போல் அல்லாமல் இந்தியாவில் கொரோனா நிலை அந்த அளவுக்கு தீவிர தன்மையோடு இருக்காது என அவர் கூறியுள்ளார்.


நோய் எதிர்ப்பு சக்தி திறன்:


கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், "இந்த அனைத்து வகைகளும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களும் இந்த கொரோனாவால் பாதிக்கப்படலாம்.


அதேபோல, ஒமைக்ரானால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவரும் இந்த வகை கொரோனாவால் பாதிக்கப்படலாம். நோய்த்தொற்றின் தீவிரம் டெல்டாவில் இருந்த அளவுக்கு இல்லை. அதற்குக் காரணம், நம்மிடம் ஹெர்ட் இம்யூனிட்டி ஓரளவு உள்ளது.


உண்மையில், மற்ற வைரஸ் நோயால் நாம் பாதிக்கப்பட்டதால் நமக்கு ஹெர்ட் இம்யூனிட்டி உள்ளது. நாம் டெல்டா அலையைப் பார்த்திருக்கிறோம். அது பெரிய அலை. பிறகு, தடுப்பூசி போட்டு கொண்டோம். பின்னர், ஒமைக்ரான் அலை வந்தது. இருப்பினும், நாங்கள் பூஸ்டர் டோஸ் போடுவதை தொடர்ந்தோம்.


நாம் பல வழிகளில் அவர்களுடன் வேறுபட்டவர்களாக உள்ளோம். சீனாவில் நடப்பது இந்தியாவில் நடக்காமல் போகலாம். சீனாவில் பின்பற்றி வந்த பூஜ்ய கொரோனா கொள்கையே அங்கு கொரோனா பரவல் ஏற்பட காரணம். குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்டதும் கொரோனா தீவிரமாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்" என்றார்.


கவலை:


சீனா கொரோனா பரவல் குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. 


வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், இதுகுறித்து பேசுகையில், "சீனாவில் மாறி வரும் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலை கொண்டுள்ளது. பலர் தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான வண்ணம் இருக்கிறது. 


நோயின் தீவிரத்தன்மை, மருத்துவமனைகளில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது போன்ற தகவல்களை தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார்.