கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியது. தேசிய அளவிலான கோவிட்- 19 தடுப்பூசித் திட்டத்தை கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்ளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது, நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது. அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று உரிய அடையாள அட்டைகளை காண்பித்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்வது அவசியம். இரண்டு டோஸ்களுக்கு இடையில் 6 - 8 வார இடைவெளி இருக்கவேண்டும் என மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது. இரண்டாவது டோஸ் போடப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான், உங்கள் உடலில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 84.61 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.