கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது, ”கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல் வீசப்பட்டது உண்மைதான்” என தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் தலைமை இயக்குனர் ராஜ்வி ரஞ்சன் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகம் இருந்தாலும், உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த போக்கு அதிகம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.     


கடந்த 5 ஆண்டுகளாக, தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் அதிகாரியாக  பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவர். நமாமி கங்கா திட்டத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், Ganga: Reimagining, Rejuvenating, Reconnecting, என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம்  கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 




இப்புத்தகத்தில்,கொரோனா தொற்று காலத்தில் கங்கை நதி சந்தித்த பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். Floating Corpses: A River Defiled என்ற பகுதியில், கொரோனா இரண்டாவது அலையின்போது கங்கை மற்றும் அதன் கரையை ஒட்டிய  மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்பட்டன. ஒருகட்டத்தில், எரிமேடைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை மாவட்ட நிர்வாகத்தால் சந்திக்க முடியவில்லை. எனவே, கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல் வீசப்படுவது சிரமமில்லாததாக மாறியது.    






உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றில் வீசப்பட்ட தகவல் அறிந்து வேதனையடைந்ததாக குறிப்பிட்ட அவர், கங்கையின் தூய்மைக்காக  கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தையும்  பலவீனப்படுத்தின” என்றும் தெரிவித்துள்ளார். 


தலைமை இயக்குனராக  இருந்துகொண்டு, தொலைக் காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் கங்கை நதிக்கரையில் சடலமாக கிடக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது வேதனை கொண்தாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு மாவட்ட கங்கா இயக்க அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கபோதிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கங்கை நதியில் வீசப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-க்கும் மேல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் கங்கையில் வீசப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றும் ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன. 


இரண்டாவது அலையின்போது உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 43 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அம்மாநில அரசு நிர்வாகம், கங்கை நதியில் உடல் வீசப்படும் பழக்கம் காலந்தொட்டு இருந்து வருகிறது என்றும் தெரிவித்தது.