சாட்சி போதியதாக இல்லை எனக் கூறி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விவசாயி அவர் மீதான வழக்கிலிருந்து விடுவித்துள்ளது நீதிமன்றம்.


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் தரம்பால் சிங். இவருக்கு 85 வயதாகிறது. தரம்பால், ஷாம்ளி மாவட்டம் ஹரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி.  இவர் மீது கடந்த 1986 ஆம் ஆண்டு வீட்டிலேயே சட்டவிரோதமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவரது சகோதரர் குன்வர்பாலும் சேர்க்கப்பட்டிருந்தார். குன்வர்பால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.


இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தரம்லால் அந்த வழங்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "நான் என் வாழ்க்கையில் பணம், புகழ், மன அமைதி ஆகியவற்றை இழக்க இந்த வழக்குதான் காரணம். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதாவது எனக்கு நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்காக நான் மாண்புமிகு நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிறைய பணம் இழந்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளில் 400 வாய்தாக்களில் ஆஜராகியிருக்கிறேன்.


1986 நவம்பர் மாதம் தானா பவண் போலீஸார் என்னையும் என் சகோதரரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் இருந்து 26 பைகளில் போலி பூச்சிக் கொல்லிகளைக் கண்டெடுத்ததாகவும் கூறப்பட்டது. எங்கள் மூவர் மீதும் இபிகோ 420 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். பின்னர் ஜாமீனில் வெளிவந்தோம். அன்றிலிருந்து நான் 35 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஒருவழியாக இந்த வழக்கில் போதிய சாட்சி இல்லாததால் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய மன ஆறுதலைத் தருகிறது" என்று கூறினார்.
இந்த வழக்கு குறித்து தரம்பாலின் வழக்கறிஞர் கரண் சிங் பண்டிர், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரில் குன்வர்பால் 5 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்துவிட்டார். லியாகாத் தலைமறைவாகிவிட்டார். அரசுத் தரப்பில் இந்த வழக்கில் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு சாட்சியத்தைக் கூட காட்ட முடியவில்லை. கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தும் காட்டப்படவில்லை.


இப்படியே இந்த வழக்கு 35 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இப்போது தரம்பால் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.


நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் சிவில் வழக்குகள் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியிருக்கும். சாதாரண வழக்குகளை விரைந்து விசாரித்து உரியவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தரம்பால் போன்றோரின் கோரிக்கையாக உள்ளது.