கோவாவுக்கு வந்த சொகுசுக்கப்பலில் மட்டும் 66 பேருக்கு கொரோனா பாசிட்டி கண்டறியப்பட்டது. இதனால் கப்பலில் இருந்து யாருமே இறங்கக் கூடாது என்று கோவா அரசு உத்தரவிட்டது. கப்பலை மீண்டும் மும்பைக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கொரோனா அச்சுறுத்தல் மட்டுமின்றி ஒமிக்ரான் அச்சுறுத்தலும் மாநில அரசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவுக்கு வந்த சொகுசுக்கப்பலில் மட்டும் 66 பேருக்கு கொரோனா பாசிட்டி கண்டறியப்பட்டது.
நியூ இயரை திட்டமிட்டு மும்பையில் இருந்து கோவாவுக்கு சொகுசுக் கப்பல் ஒன்று வந்தது. அந்தக்கப்பலில் சுமார் 2000க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். இந்நிலையில் கப்பலில் இருந்த ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கப்பலில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 66 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. முன்னதாக இரண்டு தினங்களுக்கு மேலாக கொரோனா சோதனை தொடர்ந்ததால் கப்பலை விட்டு யாருமே தரையில் இறங்கக் கூடாது என கோவா அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் புத்தாண்டு கொண்டாட கோவா வருகைபுரிந்த சுற்றுலாபயணிகள் அனைவரும் கப்பலிலேயே நியூ இயரை கொண்டாடியுள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல் கோவா மாநிலத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மக்கள் பெரும் திரளாக ஈடுபட்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் கோவாவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்களுக்காக கடற்கரை நகரமான கோவாவில் பயணிகள் குவிந்தனர். கடந்த ஜனவரி 2 அன்று எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி, கோவிட் தொற்றின் பாசிட்டிவ் விகிதம் சுமார் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு அங்கு திரண்ட பெருமளவிலான சுற்றுலா பயணிகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்