இந்தியாவில் கோவிட் -19 உயிரிழப்புகளைப் பொறுத்த வரையில் கடந்தாண்டு பாதிப்புகளை விட, 2021 மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையில் குறைந்து காணப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா திங்களன்று தெரிவித்தார்.
2020, செப்டம்பர்-நவம்பர் மற்றும் 2021மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்கு இடையே நாட்டில் உள்ள 40 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 9,485 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஐசிஎம்ஆர்-ன் கோவிட்- 19 தடுப்பு மருந்து மற்றும் மருத்துவ பரிசோதனைப் பதிவு ஆராய்ந்தது.
இந்த தரவுகளை மையமாக வைத்து ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டாக்டர் பல்ராம் பார்கவா, "முதல் பாதிப்பு அலையை ஒப்பிடும்போது கொரோனா இரண்டாவது அலையில் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை அதிகமாக உள்ளது. அதே சமயம், வென்டிலேட்டர்களின் தேவை தற்போது குறைந்து காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.
"தீவிர பாதிப்புள்ள கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமானது. தற்போது ஆக்ஸிஜனின் தேவை 54.5% ஆக உள்ளது. முந்தைய அலையில் இதன் தேவை 41.1% ஆக உள்ளது. இதற்கு மாறாக, வென்டிலேட்டர்களின் தேவை தற்போது குறைந்து காணப்படுகிறது. முந்தைய அலையுடன் ஒப்பிடும் பொது தற்போது வென்டிலேட்டர்களின் தேவை 10% குறைந்துள்ளது" என சுட்டிக் காட்டினார்.
புதிய வகை கொரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து மதிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார். சரியான கோவிட் நடத்தை விதிமுறைகளை மக்கள் பின்பற்றாத காரணத்தினால் தான் பாதிப்புகளின் எண்ணிக்கை திடிரென்று அதிகரித்ததாகவும்கூறினார்.
2020-21 ஆண்டுகளுக்கு இடையே சார்ஸ் கோவி- 2 வைரஸ் அலைகளில் காணப்படும் மாற்றங்கள் குறித்த விளக்கவுரையை ஐசிஎம்ஆர்- ன் National Covid-19 Registry வெளியிட்டது.
- இரண்டு அலைகளிலும், கிட்டத்தட்ட 70 விழுக்காடு பாதிப்புகள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.
- இரண்டாவது அலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அநேக நோயாளிகளிடம் மூச்சுத்திணறல் பாதிப்பு காணப்படுகிறது.
- இரண்டாவது அலையில், 0-19 மற்றும் 19-24 வ்யதுக்கு உட்பட்டோர் முந்தைய அலையை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகமான பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இரண்டவாது அலையில் மருத்துவ ஆக்சிஜனின் தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
- இரண்டு அலைகளிலும் கொரோனா இறப்பு விகிதங்கள் சம அளவு அடிப்படையில் உள்ளது.
என்று அந்த விளக்கவுரையில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கோவிட்-19 சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளின் ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தொழில்துறை சார்ந்த 9 பணிகளுக்கு மட்டம் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை இந்திய ரயில்வே முழு அளவில் துவங்கியுள்ளது. 3320 மி.மீ உயரமுள்ள டேங்கர் லாரிகளை, 1290 மி.மீ உயரமுள்ள தட்டையான சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் கொண்டு செல்வது சாத்தியம் என ரயில்வே துறை முன்னதாக தெரிவித்தது.