இந்த உலகம் நான்காவது கொரோனா பெருந்தொற்று அலையை சந்தித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். எனவே, எந்தவித சரமசமின்றி கொரோனா கடுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ”நாட்டில், தொடர்ந்து நான்கு வாரங்களாக, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக காணப்படுகிறது. கடந்த இரு வாரங்களின் சராசரி தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெறும் 7 ஆயிரமாக உள்ளது. எவ்வாறாயினும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களின் சராசரி உறுதிப்படுத்துதல் விகிதம் தேசிய விகிதத்தை விட அதிகமாக உள்ளது” எனவும் தெரிவித்தார்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அதிக அளவிலான புதிய பாதிப்புகளை தொடர்ந்து கண்டு வருகிறது. ஆனால், மறுபுறம் ஆசிய நாடுகளில் குறைவான புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலகின் ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது, இந்தியாவை பொறுத்த வரையில் இந்த விகிதம் 5.3 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.
ஒமிக்ரான் தொற்று:
108 நாடுகளில் இதுவரை 1,51,368 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்த அவர், ”இங்கிலாந்து, டென்மார்க், கனடா, நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலிய, எஸ்தோனியா உள்ளிட்ட நாடுகள் ஒமிக்ரான் பரவல் அதிகமிருக்கும் நாடுகளாக உள்ளன” என்றும் தெரிவித்தார்.
தற்போதுவரை இந்தியாவில் டெல்டா வகை கொரோனா பரவல் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். நாட்டில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. இவர்களில் 144 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் 88 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 42 பேர் குணமடைந்துள்ளனர். தில்லியில் 67 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், 23 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் குணமடைந்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்