புதிய உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாகவும், அதிக செயல்திறன் வாய்ந்தது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. 


பலதரப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் தற்போது சுற்றிக்கொண்டிருக்கின்றன.  இவற்றில், இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta),  பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை) ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா உருமாறிய கொரோனா வைரஸ் மரபணு அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களால் 'டெல்டா பிளஸ் வகை வைரஸ் உருவானது. ஆனால், இது இந்தியாவுக்கு வெளியே தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்றால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் முதன்முறையாக நேற்று ஒருவருக்கு டெல்டா பிளஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் டெல்டா ப்ளஸ் வைரஸால் 70 பேரும் தமிழ்நாட்டில் 10 பேரும் பாதிக்கப்பட்டனர். ஜூலை 22 வரை 46124 சாம்பிள்களை ஆய்வு செய்ததில் டெல்டா வகை வைரஸ் 58.4% எனத் தெரிய வந்துள்ளது.


டெல்டா பிளஸ் வைரஸின் ஏஒய்.1 வகை தொற்று நேபாளம், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, போலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஒய்.2 வகை தொற்று, குறைவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பரவும் தன்மை, தீவிரம் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் பற்றி இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


 


கோவாக்சின் தடுப்பூசி:  


முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில், பாரத் பயோக் டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை, அவசர காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியது.   


பாரத் பயோடெக் நிறுவனம் எலிகள், முயல்கள் போன்ற பல்வேறு விலங்கு இனங்களில் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தரவை உருவாக்கி ஆய்வுகளை நடத்தியது. 3ம் கட்ட மனித பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 22,500 பேருக்கு , கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு உறுதி (safety data including Serious Adverse Event data) செய்யப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் தான்  அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.


தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் கடந்த ஜூலை மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்பட்டது. அதில், லேசானா மற்றும் மிதமான கொரோனா அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி 77.8% பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தீவிரமான கொரோனா அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு 93.4% பாதுகாப்பு கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உலகில் மிகத் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2% பாதுகாப்பை தருவதாகும் கூறப்பட்டுள்ளது. 


இந்நிலையில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.