மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சில நிறுவனங்களே கட்டுப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்றும் அரசியல் கட்சி ஒன்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று தள்ளுபடி செய்துள்ளது. விளம்பரம் தேடுவதற்காக அனைவரும் வர வேண்டிய இடம் நீதிமன்றம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 






மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இன் கீழ் தேர்தல் நடைமுறைகள் தேர்தல் ஆணையத்தால் (EC) கண்காணிக்கப்படுவதாகவும், பல ஆண்டுகளாக வாக்குப்பதிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்தியப் பிரதேச ஜன் விகாஸ் கட்சி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.


"தேர்தல் நடைமுறையின் விளைவாக வாக்காளர்களிடமிருந்து அதிக அங்கீகாரத்தைப் பெறாத கட்சி இப்போது மனு தாக்கல் செய்வதன் மூலம் அங்கீகாரம் பெற முயல்கிறது" என உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்யும் போது குறிப்பிட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வந்தாலும், அவ்வப்போது பிரச்னைகள் எழுப்பப்பட்டு வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 


நீண்ட காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாட்டில் இருந்து வருவதாகவும் ஆனால், அவ்வப்போது இது தொடர்பாக பிரச்னைகள் எழுப்பப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தலை மேற்பார்வையிட்டு அதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டம் 324 பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 


இதை மேற்கோள் காட்டி ஜன் விகாஸ் கட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார். சட்டப்பிரிவு 324, தேர்தல் தொடர்பான எல்லாவற்றையும் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.


இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் தெரியுமா? இது ஒரு பெரிய நடைமுறை" என்றார். 


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் விரும்புகிறாரா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது வெறும் விளம்பரம் பெறுவதற்காக மட்டும் அனைவரும் வந்து செல்லும் இடம் அல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.