Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ உத்தரவிட்டுள்ளது. அவரது மகன்களான தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கும் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தலா ரூ.1 லட்சத்திற்கான பிணைய தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ் மத்திய அமைச்சராக இருந்தபோது, பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்து அதற்கு ஈடாக அவர்களது நிலத்தை தனது குடும்ப உறுப்பினர்கள் மீது எழுதி வாங்கிக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டிரின் பேரில் இந்த பண மோசடி வழக்கு நடைபெற்று வருகிறது.


வழக்கு விசாரணை: 


செப்டம்பர் 18-ம் தேதி முதல் முறையாக இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. தேஜ் பிரதாப் யாதவ் ஏ.கே இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக இருந்ததால், குற்றச்சாட்டில் அவரது தலையீட்டை நிராகரிக்க முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அதைதொடர்ந்து,  லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ்வர் சிங், ஹசாரி பிரசாத் ராய், சஞ்சய் ராய், தர்மேந்திர சிங், கிரண் தேவி ஆகியோருக்கு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமின் அளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை ஆகஸ்ட் 6 அன்று தாக்கல் செய்தது. அவர்களில் 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கு விவரம் என்ன? 


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் இந்த முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2009 க்கு இடையில், இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் குரூப் டி பதவிகளுக்கு பலர் நியமிக்கப்பட்டனர், அவர்கள் தங்கள் நிலத்தை லாலு யாதவின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றினர் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐயின் கூற்றுப்படி, நியமனத்திற்கான விளம்பரம் அல்லது பொது அறிவிப்பு வெளியிடப்படவில்லை, ஆனால் சில பாட்னா குடியிருப்பாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மண்டல ரயில்வே பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர்.


அப்படி பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், நேரடியாகவோ அல்லது அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ, லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலத்தை மிகக் குறைந்த விலையில், அதாவது சந்தை விலையா காட்டிலும் நான்கில் ஒரு பங்கு முதல் ஐந்தில் ஒரு பங்கு வரை விலை நிர்ணயம் செய்து விற்றதாகக் கூறப்படுகிறது.


யாதவ் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.