மற்றொருவர் முன்பு சுயஇன்பம் காண்பது குற்றம்சாட்டப்பட்டவரின் பாலியல் நோக்கத்தை ஊகிக்க போதுமானது என மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் 60 வயது நபரை குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளது.






பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி பிரியா பங்கர் ஆகஸ்ட் 29 அன்று குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று கண்டறிந்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு, இணையத்தில் வியாழக்கிழமை அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.


பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன், தனது வீட்டிற்கு அருகில் உள்ள குற்றவாளியின் தையல் கடைக்குச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர், தனது அந்தரங்க உறுப்பைத் தொடுவதைக் கண்டதாக அரசுத் தரப்பு வாதம் முன்வைத்தது.


போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது அந்தரங்க உறுப்பை சிறுவனிடம் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், சிறுவனை கடைக்கு அழைக்கவில்லை, சிறுவனின் அருகில் செல்லவில்லை என்று வாதிட்டார். அந்த நபரின் செயலை சிறுவன் தற்செயலாக பார்த்தது உண்மைதான் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


இதுகுறித்து நீதிமன்றம் விரிவாக விவரிக்கையில், "ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரின் கடை சிறியதாக இருந்ததால், அந்த வழியாக செல்பவர் யாரேனும் அவரது செயலை பார்த்திருப்பார். எனவே அவர் தனிப்பட்ட முறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்டார் என்று கூற முடியாது. சிறுவன் அந்த மனிதனின் செயலைக் கண்டதும், அதை மறைக்காமல் அவனுக்குச் சில விளக்கங்களைச் சொல்ல முயன்றுள்ளார்.


சுயஇன்பம் என்பது ஒரு பாலியல் செயல். மற்றொரு நபரின் முன்னிலையில் அதை செய்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் பாலியல் நோக்கத்தை ஊகிக்க இதுவே போதுமானது. பாதிக்கப்பட்டவர் மீதும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும், சமூகத்தில் கூட இந்தச் சம்பவத்தின் காரணமாக மோசமான தாக்கம் ஏற்பட்டுள்ளது.


வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல. சமூகத்தின் மீது இது ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. நிச்சயமாக, இதுபோன்ற நிகழ்வுகள் மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவரின் மனதில் நீண்ட கால வடுவை ஏற்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளது.


சிறுவன் முன்பு முதியவர் ஒருவர் சுயஇன்பம் கண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.