ஆந்திர மாநிலம் ஸ்ரீகக்குளம் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் உள்ளே திருட முயன்ற திருடன் ஓட்டையில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான காமெடி படம் கலகலப்பு. இப்படத்தில் கதாநாயகர்களாக விமலும் மிர்ச்சி சிவாவும் நடித்திருந்தனர். அதில் மிர்ச்சி சிவா திருடனாக நடித்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். அந்த படத்தில் ஒரு சீனில் மிர்ச்சி சிவா அமைச்சர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருட முயற்சிப்பார். அதில் பணத்தையும் நகையையும் திருடிக்கொண்டு வெண்டிலேட்டருக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டை வழியாக வெளியேற முயற்சிப்பார். ஆனால் வெளியே வர முடியாமல் இடையில் சிக்கி பரிதவிப்பார். உடனடியாக அனைவரும் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பார்கள். அதேபோன்ற ஒரு சம்பவம் ஆந்தராவில் நடந்துள்ளது.
35 வயதான ரீசு பாபா ராவ் என்பவர் ஆந்திர மாநிலம், ஜடுபுடி கிராமத்தின் அருகில் உள்ள ஜமி எல்லாம்மா கோயிலில் உள்ள நகைகளை திருடுவதற்காக, கோயிலின் பின்னால் ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த செங்கல்களை அகற்றி விட்டு உள்ளே நுழைந்திருக்கிறார். கோயிலுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த 650 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி ஆபரணங்களை திருடி விட்டு வந்த ஓட்டை வழியாகவே வெளியேற முயற்சித்திருக்கிறார்.
ஆனால் எதிர்பாரத விதமாக, ஓட்டையில் மாட்டிக்கொண்ட பாபாராவ் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக ஓட்டையிலேயே பரிதவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்து அழ ஆரம்பித்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் அவரை வெளியே இழுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களாலும் அவரை வெளியே எடுக்க முயவில்லை என்பது தெரிகிறது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கோயில் கதவுகளை திறந்து ரீசுவை மீட்டனர். தொடர்ந்து 6 விதமான பொருட்களை திருடியதாக, சட்டப்பிரிவு (454)அத்துமீறி நடத்தல் மற்றும் திருடுதல் (380) ஆகிய பிரிவுகளின் கீழ் வழ்க்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்