கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று உலகையே உலக்கியது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிதன் மூலமாகவும் தடுப்பூசி எடுத்து கொண்டதன் விளைவாகவும் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது.


அதே சமயத்தில், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட பிறகும் சிலர் உயிரிழந்தனர். அதேபோல, தடுப்பூசி எடுத்து கொண்டதன் பின் விளைவாகவும் சில உயிரிழப்பு பதிவானது. ஆனால், லட்சத்தில் ஒருவருக்கும் இம்மாதிரியான சம்பவம் நிகழந்தது. 


அந்த வகையில், கடந்தாண்டு, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பின் விளைவால் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது.


தடுப்பூசி காரணமாக மரணம் ஏற்பட்டிருந்தால் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் தொடர்ந்து இழப்பீடு பெறுவதுதான் ஒரே தீர்வு" எனக் குறிப்பிட்டுள்ளது.


தடுப்பூசி எடுத்து கொண்ட பின் ஏற்படும் பாதகமான விளைவுகளை முன்கூட்டியே கண்டறிவதற்கும் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதற்கும் ஒரு நெறிமுறையைத் தயாரிக்க ஒரு நிபுணர் மருத்துவக் குழுவை உருவாக்க வேண்டும்.


இறப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பெற்றோர்கள் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.


கடந்த வாரம், இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், "தடுப்பூசிகளின் பயன்பாட்டினால் நிகழும் மிகவும் அரிதான மரணங்களுக்கு பொறுப்பேற்பது, குறுகிய நோக்கத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதற்கு மாநிலத்தை பொறுப்பாக்குவது சட்டப்பூர்வமாக நிலையானதாக இருக்காது" என தெரிவித்தது.


 






இரண்டு இறப்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மத்திய அரசு, "இரண்டு மரணங்களில் ஒரு மரணம் மட்டும்தான் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டினால் ஏற்பட்டது என்பதை நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது. 


தடுப்பூசி எடுத்து கொண்டதால் ஒருவருக்கு பாதகமான பின் விளைவு ஏற்பட்டு உடல் காயம் அல்லது மரணம் அடைந்தால், தடுப்பூசி பயனாளிகளுக்கு அவர்களின் குடும்பங்களுக்குச் சட்டத்தில் பொருத்தமான தீர்வுகள் உள்ளன.


இதில் சேதம்/இழப்பீடு கோருவதற்காக சிவில் நீதிமன்றங்களை அணுகலாம். அலட்சியத்திற்கான அத்தகைய உரிமைகோரலை வழக்கை பொறுத்தே தீர்மானிப்போம்" என தெரிவித்தது.