நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதீக வீரியத்துடன் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் பன்மடங்காக உயர்ந்து வரும் நிலையில், இறப்பின் விகிதமும் தொடர்ந்து அதிகரிப்பது வேதனையாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்கள் அவர்களது இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்க மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
ஏனென்றால் ஒருவரது ஒருவரது ரத்தத்தில் சாதாரணமாக 95 சதவீதத்திற்கு மேல் ஆக்சிஜன் அளவு இருக்கவேண்டும். ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அபாய கட்டத்தினை அடைகின்றனர். எனவே ஆரம்ப கட்டத்திலேயே ஆக்சிஜன் அளவினை கண்காணிக்க வீட்டிலேயே பல்ஸ் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
எனவே வீட்டிலிருந்து கொரொனா சிகிச்சை பெறுபவர்கள் எப்படி இந்த ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
1. பல்ஸ் ஆக்ஸிமீட்டரை விரலில் வைத்து பார்ப்பதற்கு முன்னர் விரலில் நெயில் பாலிஷ், நகத்தில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. ஆக்ஸிமீட்டரை உபயோகப்படுத்துவதற்கு முன்னர் குறைந்தது 5 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
3. பின்னர் இதயத்தில் வைத்து சீராக துடிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. அதனையடுத்து பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் சுவிட்சினை ஆன் செய்து ஆள்காட்டி அல்லது நடுவிரலில் வைக்க வேண்டும்.
5. ஒரு நிமிடத்திற்குள்ளாகவே நாடித்துடிப்பின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் அளவும் டிஸ்பிளேயில் தெரியும். ஒருவேளை நிலையான அளவு தெரியாவிடில், சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் ஆக்ஸிமீட்டரை எடுக்காமல் விரலிலே வைத்திருக்க வேண்டும்.
6. ஆக்ஸிமீட்டரில் நிலையான அளவு கிடைத்தவுடன் அளவின் எண்ணிக்கை சரியாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.
7. உடலில் மொத்த ஆக்ஸிஜன் அளவு 95-100 என்ற சதவிகிதத்தில்தான் சீராக உள்ளதாக அர்த்தம். எனவே அந்த அளவு சரியாக உள்ளதா? என்பதை கவனிக்கவேண்டும்.
8. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
9. இதே போன்று நாடித்துடிப்பு 60-80 சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதே 90-120 சென்றால் உடனடியாக மருத்துவரின் அறிவுரைகளை பெற்று அதற்கேற்ற சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மருத்துவர்களின் கூற்றுப்படி வீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்பவர்கள், ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஆக்சிஜன் அளவு மேற்சொன்னபடி சரியாக உள்ளதா? என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அளவில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் தற்போது கொரோனா தொற்றினால் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் நம் உடலில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தான் என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இதோடு வீட்டு தனிமையில் இருப்பவர்கள், ரத்த ஆக்சிஜன் அளவினை நிர்வகிக்க, 4-5 தலையணைகள் உதவியோடு குப்புறப்படுப்பது, பின் வலது புறம் படுப்பது, சிறிது நேரத்திற்கு பின் உட்கார்ந்துவிட்டு இடது புறமாக படுப்பது இறுதியாக மீண்டும் குப்புறப்படுப்பது போன்ற ப்ரோன் வென்டிலேட்டர் முறையினை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதோடு முகத்தினை கீழே வைத்து மார்பினை உயர்த்தி விரைவான சுவாசத்தினை பெற பயிற்சி செய்வதும் அவசியமான ஒன்றாக உள்ளது.