கேள்வி : ஆக்சிஜன் சிலிண்டர்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?


பதில் : காற்றில் 19 சதவீதம் ஆக்சிஜன், 74 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் காற்றுதான். லிண்டே பிரசஸ் என்ற முறையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் காற்றினை உயர் அழுத்தத்தில் இருந்து திடீரென குறைந்த  அழுத்தமாக்கப்படும் போது திரவ வடிவத்தில் நைட்ரஜனை தனியாகவும், ஆக்சிஜனை தனியாகவும் பிரிக்கிறோம். -196 டிகிரியில் திரவ ஆக்சிஜன் கிடைக்கும். உதாரணமாக ஒரு டம்ளர் லிகியூட் 700 டம்ளர் கேஸுக்கு சமம். எனவே திரவ ஆக்சிஜனை எளிதாக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லமுடியும்.




கேள்வி : தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை மற்றும் உற்பத்தி எந்த நிலையில் உள்ளது?


பதில் : ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் செய்யப்படும் திரவ ஆக்சிஜன் அளவு மூன்றில் ஒரு பகுதியாக குறைந்துள்ளது. பொதுவாக நாள் ஒன்றுக்கு 15 டன் ஆக்சிஜன் கொள்முதல் செய்வோம். அதில் அதிகபட்சம் 3 டன் அளவில் மருத்துவ பயன்பாட்டுக்கு விநியோகிப்போம். ஆனால், இந்த சூழ்நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கொள்முதல் அளவு மூன்றில் ஒரு பங்காக குறைந்து, நாள் ஒன்றுக்கு 5 டன் அளவிலேயே கிடைக்கிறது. ஆனால் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தேவை இருமடங்கு அதிகரித்து குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 6 டன் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது எங்களாலேயே நேரடியாக கொள்முதல் செய்ய முடியவில்லை. உதாரணமாக, கேரளாவில் இருந்து எங்களுக்கு வரவேண்டிய ஆக்சிஜன் கண்டெய்னர்கள் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு திருப்பிவிடப்பட்டன. இதேநிலை தொடர்ந்தால் எங்களால் விநியோகம் செய்யமுடியாத சூழல் ஏற்படும். அது இங்குள்ள மருத்துவ தேவைகளை கடுமையாக பாதிக்கும்.


ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே கிரையோஜெனிக் டேங்க் எனப்படும் திரவ ஆக்சிஜனை நேரடியாக பெறக்கூடிய வசதிகளை வைத்துள்ளனர். அவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் நாங்களே சிலிண்டரில் நிரப்பி சப்ளை செய்ய வேண்டும். அரசு தடையில்லா ஆக்சிஜன் சப்ளையை எங்களுக்கு உறுதி செய்தால் மட்டுமே, எங்களால் அதை மருத்துவமனைகளுக்கு குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்கமுடியும்.




கேள்வி : ஆக்சிஜன் சிலிண்டர்கள் விலை உயர்வுக்கு காரணம் என்ன? 


பதில் : ஒரு கியூபிக் மீட்டர் அளவு ஆக்சிஜன் ரூ.9-இல் இருந்து 15 ரூபாயாக அதிகரித்துவிட்டது. அதனுடன் 12 சதவீத ஜி.எஸ்.டி., போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் சேர்த்து அதிகபட்சம் ஒரு கியூபிக் மீட்டர் ஆக்சிஜனுக்கு ரூபாய் 25 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. 7 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் 8 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவை அதிகமாக இருந்தாலும் நாங்கள் விலையை அதிகமாக வைத்து விநியோகிக்க முடியாது. ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை அனைத்துமே வாடிக்கையாளர்களான நோயாளிகள் மீதே சுமத்தப்படும். அதேநேரத்தில் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. அப்படி கிடைக்கும் சிலிண்டர்களில் ஒரு கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் 60 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.


கேள்வி : ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்ன?


பதில் : கொரோனா முதல் அலையின்போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. தமிழ்நாட்டின் ஒரு நாள் தேவை 240 மெட்ரிக் டன்னில் இருந்து 480 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. தற்போது தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பதிலாக மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் குறைவாக இருப்பதுதான். பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு ஆலையை துவக்க 300 கோடி ரூபாயும், 2 ஆண்டு காலமும் தேவை என்பதால் எளிதாக துவக்கமுடியாத நிலை உள்ளது. 




கேள்வி : ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?


பதில் : வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொள்முதலை அதிகரித்து கள்ளச்சந்தையில் பதுக்கி அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நைட்ரஜன் உற்பத்தி செய்யும் ஸ்டீல் ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும். திரவ ஆக்சிஜன் விலை உயர்வை கட்டுப்படுத்தி விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு கொரானா ஆரம்பித்தபோதே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இருந்தாலும் நிலைமை மெல்ல மெல்ல சீரடைந்ததால் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், நோய் தொற்றிலிருந்து தங்களை மக்கள் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். அதுவே நிரந்தரமான தீர்வை தரும் என்றார்.