இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 3 லட்சம் என்ற அளவில் பதிவாகிவரும் நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஆகிய இன்னல்களால் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படும் டெல்லியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் தினசரி நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசினால் உயிரிழந்து வருகின்றனர்.
மகாராஷ்ட்ராவிற்கு அடுத்தபடியாக தொற்று அதிகரித்ததன் காரணமாக, டெல்லியில்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்ட அறிவிப்பில், டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதவிர, வீட்டில் வருமானம் ஈட்டும் நபர்கள் உயிரிழந்தால் மாதம் ரூபாய் 2 ஆயிரத்து 500 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். டெல்லியில் இதுவரை 22 ஆயிரத்து 111 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.