தமிழகத்தைப் போல புதுவையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று மட்டம் புதுச்சேரியில் 9 ஆயிரத்து 559 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரியில் ஆயிரத்து 380 நபர்களுக்கும், காரைக்காலில் 244 நபர்களுக்கும், ஏனாமில் 123 நபர்களுக்கும், மாஹேவில் 50 நபர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 797 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் 29 பேரும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் ஒருவரும், மாஹேவில் ஒருவரும் என புதுவையில் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் இன்று உயிரிழந்தவர்களில் 28 வயது இளைஞரும் அடங்குவார். இன்று உயிரிழந்தவர்களில் மட்டும் 18 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள். இதனால், புதுவையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 212 ஆக அதிகரித்துள்ளது. புதுவை முழுவதும் இதுவரை 87 ஆயிரத்து 749 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 147 பேரும், வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டவர்களில் 15 ஆயிரத்து 330 பேர் என புதுவை முழுவதும் மொத்தமாக 17 ஆயிரத்து 477 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். புதுவை முழுவதும் இன்று மட்டும் ஆயிரத்து 670 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 60-ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட ரங்கசாமி, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நிலையில் நேற்று சென்னையில் இருந்து புதுவைக்கு திரும்பினார். அவர் தனது வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.