மது குடித்தால் குடி கெடும் என்பது உண்மை தான்... ஆனால் அதை குடிக்கும் இடத்தை பார்த்தாலே குடி கெடும். அந்த அளவிற்கு அரசு மதுபான பார்களின் நிலை இருக்கும். மதுபானம் அருந்துவதில், இடம் தேர்வு செய்வதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் குடிமகன்கள் சிரமம் தான் படுகின்றனர்.




எங்காவது ஒதுங்கி பாட்டிலை திறந்தால், முதல் ரவுண்ட் முடிவதற்குள் போலீஸ் அங்கு வந்து நிற்கும். ‛இங்கே என்ன உனக்கு வேலை... இதென்ன பாரா... கிளம்பு கிளம்பு...’ என துரத்துவார்கள். ஓட ஓட தூரம் கொறையல... என்பது போல, சென்னை எழும்பூரில் ஒருவர் ஒதுங்கி மதுபானம் குடிக்கத் தொடங்கினால், அவர் அதை தீர்ப்பதற்குள் கிண்டி வரை இடம் பெயர வேண்டியிருக்கும். இது ஒரு உதாரணம் தான். ஆனாலும் அதில் ஒரு உண்மை இருக்கிறது. இங்கு தான் அப்படி என்றில்லை; கேரளாவிலும் அப்படி தான் போலும். ஆனால் அதற்காக சட்ட போராட்டம் நடத்தி, தீர்ப்பு பெறுவதெல்லாம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதற்கு சரியான உதாரணம். 


கேரள மாநிலம் கொச்சியில் வசிக்கும் சலீம் குமார் என்ற 38 வயதானவர், அங்கு விஏஓ.,வாக பணியாற்றி வருகிறார். கடந்த 2013ல் மணல் கடத்தல் தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை அடையாளம் காட்ட, சலீம் குமாரை போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் பணியில் இருந்த போது மது அருந்தியதாக சலீம் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.




தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் சலீம் குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‛என் பணி நேரம் முடிந்த பின் தான் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தனர். எனவே என் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும்,’ என கோரிக்கை வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ேஷாபி தாமஸ், ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளார். 


ஒருவர் மீது மதுவாசனை வீசுகிறது என்பதாலேயே அவர் மது அருந்தியதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் ஒதுக்குப்புறத்தில் தனி இடத்தில் மது குடிப்பது தவறல்ல. எனவே இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது,’  என அவர் தீர்ப்பளித்தார். தன் மீதான குற்றச்சாட்டை உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி வென்ற சலீம் குமாரை குடிமகன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.